அம்மா தாய்-சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம்: கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகையை குறைக்க உதவும் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்


அம்மா தாய்-சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம்: கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகையை குறைக்க உதவும் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
x
தினத்தந்தி 6 March 2019 11:00 PM GMT (Updated: 6 March 2019 7:27 PM GMT)

அம்மா தாய்-சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகையை குறைக்க உதவும் என கலெக்டர் ஆசியா மரியம் கூறினார்.

நாமக்கல், 

நாமக்கல் அருகே உள்ள எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு அம்மா தாய்-சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, 15 கர்ப்பிணிகளுக்கு அம்மா தாய்-சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

இந்த ஊட்டச்சத்து பெட்டகமானது கர்ப்பிணிகளுக்கு ரத்த சோகையினை குறைக்கவும், குழந்தையின் எடையை அதிகரிக்கவும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். அம்மா தாய்-சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தில் ஊட்டச்சத்து மாவு ½ கிலோ பாட்டில் 2-ம், ஊட்டச்சத்து டானிக் 3 பாட்டில்களும், ½ கிலோ பேரீச்சம்பழம் 2 பொட்டலங்களும், ஆவின் நெய் ½ கிலோ, குடற்புழு நீக்க மாத்திரை, துண்டு மற்றும் கப் ஆகியவை தலா ஒன்றும் இருக்கும்.

நாமக்கல் மாவட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதிஉதவி திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 19 ஆயிரத்து 66 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 47 லட்சம் நிதி வழங்கப்பட்டு உள்ளது. அம்மா தாய்-சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் பெற்ற கர்ப்பிணிகள் இதில் உள்ள சத்துப்பொருட்களை சரியான முறையில் தினமும் உட்கொண்டு ரத்தசோகை அற்ற, நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் ரமேஷ்குமார், எர்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன், மருத்துவ அலுவலர் பானுபிரியா உள்பட அரசுத்துறை அலுவலர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர்.

Next Story