தமிழகத்தில் உயர்கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 46.8 சதவீதமாக உயர்வு மகளிர் தினவிழாவில் அமைச்சர் சரோஜா தகவல்


தமிழகத்தில் உயர்கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 46.8 சதவீதமாக உயர்வு மகளிர் தினவிழாவில் அமைச்சர் சரோஜா தகவல்
x
தினத்தந்தி 6 March 2019 10:45 PM GMT (Updated: 2019-03-07T00:59:45+05:30)

தமிழகத்தில் உயர்கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 46.8 சதவீதமாக உயர்ந்து இருப்பதாக நாமக்கல்லில் நடந்த மகளிர் தினவிழாவில் அமைச்சர் சரோஜா கூறினார்.

நாமக்கல், 

சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் சார்பில் மாநில அளவிலான சர்வதேச மகளிர் தினவிழா நாமக்கல்லில் நடந்தது. விழாவுக்கு சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை ஆணையர் அமுதவல்லி தலைமை தாங்கினார். கலெக்டர் ஆசியா மரியம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் இயக்குனர் கண்ணன், பி.ஆர்.சுந்தரம் எம்.பி., வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டியையும், வளர் இளம் பெண்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தெரிவிக்கும் இனிய 16 குறுந்தகட்டினையும் வெளியிட்டு, மகளிர் தின விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பொருளாதார முன்னேற்றம் அடைந்து உள்ளனர். மகளிர் சுய உதவிக்குழுவினர் வங்கிகளில் பெறும் கடனை 99 சதவீதம் திருப்பி செலுத்துகிறார்கள் என்று வங்கியாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிப்பது, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் திட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திற்கு இதுவரை ரூ.5,145 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் 10 லட்சத்து 63 ஆயிரம் பெண்கள் பயன்பெற்று உள்ளார். அதில் 6 லட்சம் பெண்கள் பட்டம் படித்தவர்கள் ஆவார்கள். இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உயர்கல்வி படிக்கின்ற பெண்களின் சதவீதம் 46.8 ஆக உயர்ந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நாமக்கல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு சுகாதார பேழைகள் வழங்கும் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு சுகாதார பேழைகளையும், சத்துணவு பணியாளர்களுக்கு பணி கையேடுகளையும் வழங்கி, விழிப்புணர்வு சுவரொட்டிகளையும் வெளியிட்டார்.

இந்த சுகாதார பேழையில் 2 மேல் உடைகள், 2 தலைகவசம், 5 கைத்துண்டுகள், 5 சோப்புகள் மற்றும் ஒரு நகம்வெட்டி ஆகிய சுகாதார உபகரணங்கள் இருந்தன. இந்த திட்டம் தமிழகத்திலேயே முதன் முதலாக நாமக்கல்லில் தான் தொடங்கி வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story