கோத்தகிரி அருகே, ஜெனரேட்டரை எரித்த மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு


கோத்தகிரி அருகே, ஜெனரேட்டரை எரித்த மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 6 March 2019 11:00 PM GMT (Updated: 2019-03-07T01:04:55+05:30)

கோத்தகிரி அருகே ஜெனரேட்டரை எரித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே கேர்பெட்டாவில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு குடியிருப்புகளுக்கு நடுவே தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் 2-ந் தேதி தொடங்கியது. அப்போது உடனடியாக பொதுமக்கள் பணிகளை தடுத்து நிறுத்தினர். மேலும் செல்போன் கோபுரம் அமைக்க அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து தற்காலிகமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர் மீண்டும் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தனியார் செல்போன் நிறுவனம் தொடங்கியது. இதையொட்டி கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந் தேதியும், நவம்பர் மாதம் 24-ந் தேதியும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் பலமுறை கோத்தகிரி தாசில்தார், குன்னூர் ஆர்.டி.ஓ., உதவி கலெக்டர் ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.

கடந்த 5-ந் தேதி செல்போன் கோபுரத்துக்கு இணைப்பு கொடுக்க சரக்கு வாகனத்தில் ஜெனரேட்டர் கொண்டு வரப்பட்டது. உடனே வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் தனியார் செல்போன் நிறுவன அதிகாரிகள் ஜெனரேட்டரை திரும்ப எடுத்து சென்றனர். மேலும் தங்களது எதிர்ப்பை மீறி செல்போன் கோபுரம் அமைத்தால் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைத்து ஊரை காலி செய்வோம் என்று பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். இதற்கிடையில் சென்னை ஐகோர்ட்டில் அனுமதி பெற்று செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தனியார் நிறுவனத்தினர் தொடங்கி, நிறைவு செய்தனர். மேலும் செல்போன் கோபுரத்துக்கு இணைப்பு கொடுக்க ஜெனரேட்டர் கொண்டு வரப்பட்டு, அங்கு வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் ஜெனரேட்டருக்கு யாரோ மர்ம ஆசாமிகள் தீ வைத்தனர். இதனால் ரூ.4 லட்சம் மதிப்புள்ள ஜெனரேட்டர் எரிந்து நாசமானது.

இதுகுறித்த புகாரின் பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story