தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் ஓவிய, சிற்ப கலைஞர்கள் முகாம் 8 மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு


தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் ஓவிய, சிற்ப கலைஞர்கள் முகாம் 8 மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 7 March 2019 4:15 AM IST (Updated: 7 March 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் ஓவிய, சிற்ப கலைஞர்கள் முகாம் நேற்று தொடங்கியது. இதில் 8 மாநிலங்களை சேர்ந்த சிற்ப கலைஞர்கள், ஓவியர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு ஓவியர்கள், சிற்ப கலைஞர்கள் பங்குபெறும் முகாம் நேற்று தொடங்கியது. இந்த முகாம் வருகிற 12-ந்தேதி வரை நடைபெறு கிறது. இதன் தொடக்க விழாவிற்கு தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் பாலசுப்பிரமணியம் தலைமைதாங்கினார். துணை இயக்குனர் ஜோசப்தைரியராஜ் வரவேற்றார். முகாமை தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, தொடங்கி வைத்தார்.

இதில் சிற்ப கலைஞர்கள் சந்துரு, ராஜேந்திரன், ஓவியர்கள் சேயன்ராய், கங்காதரன், தென்னக பண்பாட்டு மைய நண்பர்கள் குழு தலைவர் வரதராஜன், செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் மீனாகிருஷ்ணபிள்ளை நன்றி கூறினார்.

இதில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், தெலுங்கானா, டெல்லி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 8 மாநிலங்களை சேர்ந்த புகழ்பெற்ற சிற்ப கலைஞர்கள், ஓவியர்கள் என 42 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த முகாம் வருகிற 12-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்றுள்ள கலைஞர்களால் படைக்கப்படும் மிக அரிய, அற்புதமான ஓவியங்கள், சிற்பங்கள், பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் வருகிற 13-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர 80-க்கும் மேற்பட்ட ஓவிய, சிற்ப கலை மாணவர்களும் பார்வையாளர்களாக பங்கு பெறுகிறார்கள்.

இது குறித்து தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் பாலசுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறுகையில், “இந்த கண்காட்சி 15 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்படுகிறது. தஞ்சை பெரியகோவிலில் வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை ஓதுவார்களை கொண்டு தேவார திருமுறை இசைத்திருவிழா நடத்தப்பட உள்ளது. திருவாரூர் தியாகராஜர் கோவிலில் வருகிற 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நாதஸ்வர இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

தென்னக பண்பாட்டு மையம், தமிழ்ப்பல்கலைக்கழகம் இணைந்து தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் வருகிற 18-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை 6 நாட்கள் நாடக திருவிழா நடத்தப்படுகிறது. திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை பன்னாட்டு இசை கலைஞர்களின் கருத்தரங்கமும், சென்னையில் உள்ள தமிழ்நாடு இசை பல்கலைக்கழகத்தில் வருகிற 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை கிராமிய கலைத்திருவிழாவும், கேரளாவில் 23, 24 ஆகிய தேதிகளில் கிராமிய கலை விழாவும் நடத்தப்படுகிறது.

மே மாதம் 19-ந்தேதி முதல் தென்னக பண்பாட்டு மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கலை பயிற்சி முகாமும் நடைபெறுகிறது. மேலும் தென்னக பண்பாட்டு மையத்தில் பரதநாட்டியம், வீணை, வயலின், மிருதங்கம், வாய்ப்பாட்டு, தேவாரம், சிலம்பாட்டம் மற்றும் ஓவிய பயிற்சி வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளது. மேலும் வேதங்களின் முக்கியத்துவம் குறித்த பயிற்சி வகுப்புகளும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

Next Story