பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம், கைதான 4 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு


பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம், கைதான 4 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
x
தினத்தந்தி 7 March 2019 4:00 AM IST (Updated: 7 March 2019 1:05 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் கைதான 4 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த நாகேஸ்வரன் என்பவரது மகன் சபரிராஜன் (வயது 25). இவர் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி சபரிராஜன், அந்த மாணவியை ஊஞ்சவேலாம்பட்டிக்கு வருமாறு அழைத்தார். அங்கு ஒரு காரில் சபரிராஜன், தனது நண்பர்களான திருநாவுக்கரசு (27), சதீஷ் (29), வசந்தகுமார் (24) ஆகியோர் இருந்தனர். அந்த மாணவி வந்ததும், தாராபுரம் ரோட்டில் அவரை காரில் அழைத்து சென்றனர். கார் சிறிது தூரம் சென்ற போது சபரிராஜன் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதை செல்போனில் படம் பிடித்து 4 பேரும் மிரட்டி வந்தனர். இதற்கிடையில் அந்த மாணவியின் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் நகையை பறித்து விட்டு காரில் இருந்து அந்த மாணவியை இறக்கி விட்டு சென்றனர்.

இந்த நிலையில் தொடர்ந்து ஆபாச படத்தை காட்டி மிரட்டி வந்ததால் மாணவி பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து அந்த மாணவி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பாலியல் தொல்லை, வழிப்பறி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். தலை மறைவாக இருந்த திருநாவுக்கரசை நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

கைதான திருநாவுக்கரசிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களிடம் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோக்கள் சிக்கின. அந்த வீடியோக்களை கோவையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளோம். அங்கு செல்போனில் இருந்த பழைய வீடியோக்கள் ஏதாவது அழிக்கப்பட்டு உள்ளதா? வீடியோக்களில் உள்ள நபர்கள் யார்? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை கொடுப்பார் கள். அதன்பிறகு குற்றப்பத்திரிகை தயார் செய்யப்படும். இதற்கிடையில் கைதான 4 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளோம்.

கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோருக்கு சிகரெட், குடிபழக்கம் உள்ளது. இது தவிர பெண்களை அழைத்து சென்று உல்லாசமாக இருப்பது இவர்களின் பொழுது போக்காக இருந்தது. ஆனால் சதீசுக்கு வேறு எந்த பழக்கமும் கிடையாது. ஆனால் செக்ஸ் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். இதனால் பெண்களை நோக்கியே இவரது பார்வை சென்றது.

குறிப்பாக விதவைகள், கணவனால் கைவிட்ட பெண்கள், கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்த பெண்கள், பணக்கார குடும்ப பெண்கள், டாக்டர்கள், ஆசிரியைகளை குறிவைத்து தங்களது உல்லாசத்துக்கு பயன்படுத்தியதாக சதீஷ் கூறினார். மேலும் திருநாவுக்கரசு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவரிடம் கார் மற்றும் பணம் இருந்ததால் பெண்களை அழைத்து வருவது அவருக்கு கைவந்த கலையாக இருந்துள்ளது. இதில் பெண்களில் சிலரை ஆபாச படம் எடுத்து மிரட்டி, 4 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக ஒரு சில வீடியோக்கள் சிக்கி உள்ளது.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் இருந்தால் அவர்கள் புகார் கொடுக்கலாம். புகார் கொடுக்கும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, அவர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக காக்கப்படும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பெண்கள், மாணவிகள் சமூக வலைதளங்களை கவனமாக கையாள வேண்டும். அடையாளம் தெரியாத நபர்களிடம் பழக வேண்டாம். மேலும் தங்களுடைய புகைப்படங்களை முன், பின் தெரியாத நபர்களிடம் பகிரக் கூடாது. பெண்கள் முன்னெச்சரிக்கையாக இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story