சேலையூர் அருகே துணிகரம் ஆடிட்டர் வீட்டில் 35 பவுன் நகை –பணம் கொள்ளை


சேலையூர் அருகே துணிகரம் ஆடிட்டர் வீட்டில் 35 பவுன் நகை –பணம் கொள்ளை
x
தினத்தந்தி 7 March 2019 3:30 AM IST (Updated: 7 March 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

சேலையூர் அருகே ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த சேலையூர் அருகே உள்ள மாடம்பாக்கம் யஷ்வந்த் நகர் 3–வது தெருவை சேர்ந்தவர் ஹேமலதா (வயது 53). சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக வேலை பார்த்து வந்தார்.

நேற்றுமுன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள தாயார் சரஸ்வதி வீட்டிற்கு சென்றார். அங்கேயே இரவு தங்கி விட்டார். நேற்று காலை தனது வீட்டிற்கு திரும்பி வந்தார்.

அப்போது வீட்டின் கிரில் கேட் மற்றும் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஹேமலதா, வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 35 பவுன் தங்கநகைகள் மற்றும் 50 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டிலும் கொள்ளையர்கள் திருட முயற்சி செய்தது தெரியவந்தது. இந்த கொள்ளை குறித்து ஹேமலதா சேலையூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story