வெளிநாடுகளில் இருந்து கடத்தல் சென்னை விமானநிலையத்தில் ரூ.37 லட்சம் தங்கம் பறிமுதல் 4 பெண்கள் உள்பட 20 பேர் சிக்கினர்


வெளிநாடுகளில் இருந்து கடத்தல் சென்னை விமானநிலையத்தில் ரூ.37 லட்சம் தங்கம் பறிமுதல் 4 பெண்கள் உள்பட 20 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 6 March 2019 10:00 PM GMT (Updated: 2019-03-07T01:19:43+05:30)

சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.37 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பெண்கள் உள்பட 20 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெருமளவில் தங்கம் கடத்திக்கொண்டு வரப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து சென்னை வந்த ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சென்னையை சேர்ந்த 4 பெண்கள் உள்பட 20 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.

20 பேரின் உடைமைகள் மற்றும் அவர்கள் அணிந்திருந்த உள்ளாடைகளை தனித்தனியாக அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 20 பேரும் தங்கக்கட்டிகள் மற்றும் தங்கச்சங்கிலிகளை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து 20 பேரிடம் இருந்தும் ரூ.37 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 100 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அனைவரையும் பிடித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story