சாலையில் கேரம்போர்டு விளையாடியதால் தகராறு: வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு; 4 பேர் கைது


சாலையில் கேரம்போர்டு விளையாடியதால் தகராறு: வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு; 4 பேர் கைது
x
தினத்தந்தி 7 March 2019 4:00 AM IST (Updated: 7 March 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

சாலையில் கேரம்போர்டு விளையாடியதால் ஏற்பட்ட தகராறில் 2 வாலிபர்களை அரிவாளால் வெட்டியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அடையாறு,

சென்னை மெரினா ஏகாம்பரம் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்(வயது 35). இவர், தனது நண்பர்கள் சிலருடன் வீட்டின் அருகே சாலையோரம் கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள சண்முகம் தெருவைச் சேர்ந்த 4 பேர், 2 மோட்டார் சைக்கிள்களில் அந்த வழியாக வந்தனர்.

அப்போது, சாலையில் கேரம்போர்டு விளையாடுவதால் வாகனம் செல்ல இடையூறாக இருப்பதாக மோட்டார்சைக்கிளில் வந்த 4 பேரும், சதீஷ் மற்றும் அவரது நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரும், திடீரென அரிவாளால் எதிர் தரப்பினரை சரமாரியாக வெட்டினர். இதில் சதீசுக்கு தலை, கைகளில் பலத்த வெட்டு விழுந்தது. இதை தடுக்க வந்த அவரது நண்பருக்கும் வெட்டு விழுந்தது.

இதையடுத்து 4 பேரும் மோட்டார்சைக்கிள்களில் தப்பிச் சென்று விட்டனர். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த சதீஷ் மற்றும் அவரது நண்பர் இருவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்த புகாரின்பேரில் மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ் மற்றும் அவரது நண்பரை அரிவாளால் வெட்டியதாக அதே பகுதியை சேர்ந்த பவித்திரன்(25), ஆனந்தன்(26), அரவிந்த்(20) மற்றும் தமிழ்அரசன்(20) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து அரிவாளை பறிமுதல் செய்த போலீசார், கைதான 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story