ஆரணி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து 2 பேர் பலி
ஆரணி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆரணி,
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, பரதராமியை அடுத்த அங்கனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் சீனிவாசன் (வயது 60), முனிரத்தினம் (62), வெங்கடேசன் (40), நாகராஜ் (45). இவர்கள்நேற்று அமாவாசையையொட்டி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு காரில் புறப்பட்டு சென்றனர். காரை டிரைவர் பாஸ்கர் ஓட்டினார்.
கார் ஆரணி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் நெசல் அருகே செல்லும்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக அங்குமிங்கும் ஓடியது. அதிவேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் டிரைவர் திணறினார்.
அப்போது கார், சிறுபாலத்தின் மீது மோதுவதுபோல் சென்றது. அதன் மீது மோதுவதை தவிர்ப்பதற்காக காரை டிரைவர் லேசாக திருப்பினார். ஆனால் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சீனிவாசன், முனிரத்தினம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.
உயிருக்கு போராடிய நிலையில் டிரைவர் பாஸ்கர், வெங்கடேசன், நாகராஜ் ஆகிய 3 பேரையும் அங்கு வந்த பொதுமக்கள் மீட்டனர். பின்னர் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே பாஸ்கர் உள்பட 3 பேருக்கும் ஆரணி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதும் அவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது தொடர்பாக ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story