திருவண்ணாமலை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் பயங்கர மோதல் நாற்காலிகளை தூக்கி வீசியதால் பரபரப்பு
திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் தலைவர் தேர்தலில் மனுதாக்கல் செய்ய வந்தவர்கள் கோஷ்டியாக மோதலில் ஈடுபட்டனர். அப்போது நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை அமைந்துள்ளது. இந்த பண்டகசாலையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் நடத்தப்படும்.
இந்த ஆண்டுக்கான தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் 6-ந் தேதி (அதாவது நேற்று) நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் மனுதாக்கல் செய்வதற்காக அ.தி.மு.க.வை சேர்ந்த 2 பிரமுகர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் பண்டகசாலைக்கு வந்திருந்தனர். இரு தரப்பு பிரமுகர்களும் வேட்பு மனுக்களை வைத்திருந்தனர்.
ஆனால் ஒரு தரப்பை சேர்ந்தவர்களில் ஒருவர் தலைவராகவும், இன்னொருவர் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறி அறிவிப்பு பலகையில் அவர்களின் பெயர்கள் ஒட்டப்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த மற்றொரு தரப்பினர் அது குறித்து கேட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பின் வாக்குவாதம் முற்றியதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
மோதலில் ஒருவரையொருவர் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர். அங்கிருந்த மேசைகள், நாற்காலிகள், பிளாஸ்டிக் சேர்கள் அனைத்தும் தூக்கி வீசப்பட்டன. சிறிது நேரத்தில் அந்த பகுதியே போர்க்களம்போல் மாறியது. அடிதடி முற்றியதில் ஒருதரப்பினர் பண்டகசாலையை விட்டு வெளியே ஓடினர்.
எனினும் அவர்களை விடாமல் மற்றொரு தரப்பினர் அவர்கள் மீது பிளாஸ்டிக் சேர்களை தூக்கி வீசி தாக்கினர். இந்த வன்முறை சுமார் ½ மணிநேரத்திற்கும் மேலாக நீடித்தது.
தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். எனினும் சமரசம் ஏற்படவில்லை. தொடர்ந்து இரு தரப்பினரும் வசைப்பாடிக்கொண்டே இருந்ததால் போலீசார் செய்வதறியாது திகைத்தனர். பின்னர் ஒரு தரப்பினரை போலீசார் கலைத்தனர். அத்துடன் இது குறித்து புகார்அளிக்குமாறு கூறினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
Related Tags :
Next Story