மாவட்டம் முழுவதும், 14,727 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர்


மாவட்டம் முழுவதும், 14,727 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 7 March 2019 4:30 AM IST (Updated: 7 March 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் மொத்தம் 14 ஆயிரத்து 727 பேர் பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வு எழுதினர். 848 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேனி,

பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு கடந்த 1-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. தேனி மாவட்டத்தில் 136 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த தேர்வு எழுதுகின்றனர்.

இதற்காக மாவட்டத்தில் மொத்தம் 53 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வுக்காக 15 ஆயிரத்து 575 மாணவ, மாணவிகளுக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று தமிழ் பாடத்துக்கு தேர்வு நடந்தது. இதில், 14 ஆயிரத்து 727 பேர் இந்த தேர்வை எழுதினர். அழைப்பாணை அனுப்பப்பட்டதில் 848 பேர் தேர்வு எழுதவிரவில்லை.

கல்வி மாவட்டம் வாரியாக பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் 41 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்காக 13 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் தேர்வு எழுத 4,012 பேர் அனுமதி பெற்று இருந்தனர். அவர்களில் 3 ஆயிரத்து 722 பேர் தேர்வு எழுதினர். 290 பேர் தேர்வு எழுத வரவில்லை.

உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் 50 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக 17 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இவற்றில் தேர்வு எழுத 5 ஆயிரத்து 341 மாணவ, மாணவிகள் அனுமதி பெற்று இருந்தனர். அவர்களில் 5 ஆயிரத்து 27 பேர் தேர்வு எழுதினர். 314 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேனி கல்வி மாவட்டத்தில் 45 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிளுக்காக 23 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இங்கு தேர்வு எழுத 6 ஆயிரத்து 222 பேர் அனுமதி பெற்று இருந்தனர். அவர்களில் 5 ஆயிரத்து 978 பேர் தேர்வு எழுதினர். 244 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதேபோல், தனித்தேர்வர்களாக தேர்வு எழுத 151 பேர் அனுமதி பெற்று இருந்தனர். அவர்களில் 142 பேர் தேர்வு எழுதினர். 9 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வு கண்காணிப்பு பணிகளுக்காக அறை கண்காணிப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அத்துடன், 99 பறக்கும் படைகளும், 9 நகரும் படைகளும் அமைக்கப்பட்டு இருந்தன. இவற்றில் இடம்பெற்றுள்ள அலுவலர்கள் தேர்வு அறைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த பொதுத்தேர்வு பணிகளை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து மற்றும் கல்வித்துறை அலுவலர்களும் தேர்வு மையங்களில் ஆய்வு செய்தனர்.

மாவட்டம் முழுவதும் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளில் பார்வையற்றவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் 28 பேர் அடங்குவர். அவர்கள் ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதினர். இந்த தேர்வுக்காக காலை 8 மணிக்கே தேர்வு மையத்துக்கு மாணவ, மாணவிகள் வரத் தொடங்கினர். தேர்வு மையத்தில் தேர்வுக்காக கடைசிக் கட்ட ஆயத்தப் பணிகளில் மாணவ, மாணவிகள் மும்முரமாக ஈடுபட்டு இருந்தனர். புத்தகங்களை வாசித்துக் கொண்டும், ஒருவருக்கு ஒருவர் கேள்வி, பதில்களை கூறி விவாதித்துக் கொண்டும் இருந்தனர்.

Next Story