கரூர் மாவட்டத்தில் பிளஸ்-1 தமிழ் தேர்வை 10,478 மாணவ-மாணவிகள் எழுதினர் 233 பேர் வரவில்லை


கரூர் மாவட்டத்தில் பிளஸ்-1 தமிழ் தேர்வை 10,478 மாணவ-மாணவிகள் எழுதினர் 233 பேர் வரவில்லை
x
தினத்தந்தி 7 March 2019 4:30 AM IST (Updated: 7 March 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ்-1 தமிழ் தேர்வை 10,478 மாணவ-மாணவிகள் எழுதினர். இதில் 233 பேர் தேர்வு எழுத வரவில்லை.

கரூர்,

தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் தேர்வுக்காக 39 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. காலை முதலே மாணவ, மாணவிகளுக்கு தேர்வு மையத்துக்கு வந்து, படித்த பாடங்களை கடைசியாக திருப்பி பார்த்து கொண்டிருந்தனர். பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்களை பரிசாக வழங்கி வாழ்த்தியதை காண முடிந்தது. காலையில் அனைத்து தேர்வு மையங்களிலும் பிரார்த்தனை கூட்டம் நடந்தது.

அப்போது, தேர்வறையில் துண்டு சீட்டு வைத்திருத்தல், செல்போன் பயன்படுத்துதல், வினாத்தாள்-விடைத்தாள் மாற்றம் செய்தல், ஆள் மாறாட்டத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் படிப்பதற்கு தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். மேலும் தேர்வறையில் கடைபிடிக்க வேண்டியவை உள்ளிட்டவை பற்றி மாணவர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தேர்வு சம்பந்தமான புகார்களை தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு மையத்திலும் புகார் பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

காலை 10 மணியளவில் தேர்வறைக்குள் அமர்ந்திருந்த மாணவ, மாணவிகளுக்கு வினாத்தாள், விடைத்தாள் வழங்கப்பட்டது. இதனை ஆர்வத்துடன் படித்து பார்த்த மாணவர்கள் தேர்வெழுத ஆரம்பித்தனர். கரூர் பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். கரூர் மாவட்டத்தில் மொத்தம் 10,711 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 10,478 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 233 பேர் தேர்வு எழுத வரவில்லை.தேர்வு பணிகளில் பறக்கும் படைகள், வினாத்தாள் கொண்டு செல்லும் குழு, தேர்வு அறைக்கண்காணிப்பாளர்கள், தேர்வு மைய அலுவலர்கள் என மொத்தம் 1,014 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தேர்வறைகளை பார்வையிட்டு துண்டு சீட்டு வைத்து எழுதுதல் உள்ளிட்டவற்றில் யாரேனும் ஈடுபடுகின்றனரா? என தீவிரமாக கண்காணித்தனர். இதைத்தொடர்ந்து விடைத்தாளை தேர்வறை கண்காணிப்பாளரிடம் மாணவர்கள் ஒப்படைத்து விட்டு வெளியே வந்தனர். மேலும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது. மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கு மட்டும் கூடுதலாக நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும், தேர்வெழுத வந்த மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் தேர்வு மையங்களுக்கு எளிதில் வந்து செல்ல போதிய பஸ் வசதிகளும் மேற் கொள்ளப்பட்டன. 

Next Story