துணி, காகித பை தயாரிக்க சுயஉதவிக்குழு பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் அமைச்சர் கந்தசாமி தகவல்
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணி, காகித பைகள் தயாரிக்க சுய உதவிக்குழு பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.
வில்லியனூர்,
புதுவை மாநிலம் ஏம்பலம் தொகுதி கரிக்கலாம்பாக்கத்தில் மத்திய அரசின் திறன்மேம்பாட்டு மையத்தின் ஒருங்கிணைந்த பயிற்சி மையம் உள்ளது. இங்கு புதுவை அரசு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 60 பெண்களுக்கு தையல் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் தையல் எந்திரம் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
விழாவில் அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டு, சுய உதவிக்குழு பெண்களுக்கு தையல் எந்திரங்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:–
புதுவை மாநிலம் முழுவதும் தற்போது 10 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் சிறப்பு நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்கப்படும். இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களை கவர்னரிடம் முதல்–அமைச்சரும், அமைச்சர்களும் போராடி நிறைவேற்றி வருகிறோம். இன்னும் 3 மாதங்களில் இந்த நிலை மாறும்.
இந்த மாத தொடக்கத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க இருந்தது. ஆனால் அதற்கான மாற்றுப்பொருட்களை ஏற்பாடு செய்யாமல் தடை விதித்தால் மக்கள் அவதிப்படுவார்கள். எனவேதான் பிளாஸ்டிக் பொருட்கள் தடையை 3 மாதங்கள் தள்ளி வைத்துள்ளோம்.
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக காகிதம் மற்றும் துணி பைகளை தயாரிக்க சுய உதவிக்குழு பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது பயிற்சி முடித்துள்ள 60 பேரும், தாங்களாகவே துணி மற்றும் காகித பை தயாரிக்கும் பணியில் ஈடுபடலாம். அதற்காக சுய உதவிக்குழு பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க ஆலோசித்து வருகிறோம்.
பெண்களுக்கு பயிற்சியும் அளித்து, எந்திரமும் கொடுத்து மூலப்பொருள் வாங்க பணமும் கொடுக்கப்படும். உற்பத்தி செய்யும் பைகளை கொள்முதல் செய்யவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பெண்கள் உழைப்பை மட்டும் போட்டால் போதும்.
இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.
விழாவில் தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன், சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ், பயிற்சி மைய நிறுவனர் தியாகராஜன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் குமரேஸ்வரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.