குறுகிய இடத்தில் செயல்படும் குபேர் மார்க்கெட் பொதுமக்கள், வியாபாரிகள் அவதி
குறுகிய இடத்தில் செயல்படுவதால் குபேர் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
புதுச்சேரி,
புதுச்சேரி நகரின் மையப்பகுதியான நேரு வீதியில் குபேர் மார்க்கெட் அமைந்துள்ளது. இது பெரிய மார்க்கெட் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மார்க்கெட்டில் 530 நிரந்தர கடைகளும், 1000–க்கும் மேற்பட்ட அடிக்காசு கடைகளும் உள்ளன. காய்கறிகள், பழங்கள், பூ, மளிகை பொருட்கள், மீன்கள் விற்பனை என இந்த மார்க்கெட்டில் பொருட்கள் விற்பனை களை கட்டுவது வழக்கம்.
பெரிய மார்க்கெட்டில் உள்ளூர் கடைகளைவிட குறைந்த விலையிலும், ஒரே இடத்தில் அனைத்து பொருட்களும் கிடைப்பதால் பொதுமக்கள் ஏராளமானோர் இங்கு வந்து செல்கிறார்கள். சில்லரை வியாபாரிகளும் இங்குதான் பொருட்களை வாங்குகிறார்கள். இதனால் அரசுக்கும், நகராட்சிக்கும் பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அப்போதைய காலகட்டத்தில் இருந்த மக்கள்தொகை மற்றும் வாகன போக்குவரத்துக்கு இந்த மார்க்கெட் போதுமானதாக இருந்தது. ஆனால் தற்போதைய மக்கள் தொகை மற்றும் வாகனப் பெருக்கத்தால் இங்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமாகி குபேர் மார்க்கெட் குறுகிய இடமாக மாறி விட்டது.
மக்களின் வசதிக்காக இந்த மார்க்கெட்டில் 13 நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது இந்த வாயில்கள் அனைத்தும் வியாபாரிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால் மார்க்கெட்டிற்குள் பொருட்களை கொண்டு செல்வதிலும், வெளியே எடுத்து செல்வதும் மிகவும் சிரமமான ஒன்றாக மாறிவிட்டது. பொதுமக்கள் தாராளமாக வந்து செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் பொதுமக்களால் மார்க்கெட்டில் இருந்து வெளியேற முடியாத நிலை இருந்து வருகிறது.
பல தரப்பட்ட கடைகள் நிறைந்து மிகப்பெரிய வியாபார மையமாக புதுச்சேரியின் அடையாளமாக காணப்படும் நேரு வீதி எப்போதும் காணப்படும் மக்கள் நடமாட்டத்தால் விழிபிதுங்கி நிற்கிறது. மிக குறுகிய இடமாக மாறிவிட்ட குபேர் மார்க்கெட்டை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் வேறு இடத்துக்கு மாற்றி அமைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் மார்க்கெட்டுக்குள் உள்ள ஆக்கிரமிப்புகளையாவது சரி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
குபேர் மார்க்கெட்டில் உள்ள பிரச்சினைகள் குறித்து அங்குள்ள வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘மார்க்கெட்டில் காந்தி வீதி பகுதியில் மட்டும் தான் கழிப்பறை வசதி உள்ளது. இங்குள்ள கடைகளுக்கு மின்விளக்கு வசதி இல்லை. நடைபாதைகள் மிகவும் மோசமாக உள்ளன. அதில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் விழுந்து எழுந்து செல்லும் அவல நிலை இருந்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமை தூக்கும் தொழிலாளி விழுந்து உயிரிழந்த சம்பவமே நடந்துள்ளது. வீதியில் திரியும் கால்நடைகள் ஆங்காங்கே உள்ள வழிகளில் புகுந்து விடுவதால் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மார்க்கெட்டில் குப்பை தொட்டிகள் இல்லை. மார்க்கெட்டில் உள்ள பழைய கடைகளை இடித்துவிட்டு புதிதாக நவீன வசதிகளுடன் கடைகள் கட்டித் தர அரசு முன்வரவேண்டும்’ என்றார்.
குபேர் மார்க்கெட் 1826–ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இங்கு வரும் மக்கள் நேரத்தை தெரிந்துகொள்வதற்காக தியாகு முதலியார் என்பவர் மார்க்கெட்டின் மையப்பகுதியில் மிகப்பெரிய மணிக்கூண்டு கட்டுவதற்கு அனுமதியை பெற்றார். அதையடுத்து 1851–ம் ஆண்டு ஏப்ரல் 12–ந் தேதி மணிக்கூண்டு கட்டுமான பணிகள் தொடங்கி 1852–ம் ஆண்டு ஜூலை 29–ந் தேதி பயன்பாட்டுக்கு வந்தது.
இந்த மணிக்கூண்டின் உச்சியில் உள்ள கெடிகாரம் ஒரு மணிக்கு ஒருமுறை ஒலித்து வந்தது. இதற்காக மாதம் ஒருமுறை சாவி கொடுக்கப்பட்டது. இதன் மூலமாக மார்க்கெட்டிற்கு வருபவர்கள் நேரத்தை தெரிந்துகொண்டனர். இந்த மணிக்கூண்டினை ‘கிடாராக் கூண்டு’ என மக்கள் கூறினர். தற்போது இந்த மணிக்கூண்டின் வயது 167 ஆண்டுகளாகிறது. இந்த மணிக்கூண்டு பொலிவிழந்து காணப்படுவதுடன் உரிய பராமரிப்பின்றி கிடக்கிறது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரிய மார்க்கெட் புதிதாக கட்டப்பட உள்ளது. அப்போது மணிக்கூண்டு புதுப்பிக்கப்படும்’ என்றனர்.