பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது மாவட்டத்தில் 31,143 மாணவ-மாணவிகள் எழுதினர்


பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது மாவட்டத்தில் 31,143 மாணவ-மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 6 March 2019 10:45 PM GMT (Updated: 6 March 2019 9:01 PM GMT)

பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் 31,143 மாணவ-மாணவிகள் எழுதினர்.

திருச்சி,

தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வுக்காக 116 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகள், ஆதிதிராவிடர் நல பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் மற்றும் சுயநிதிப்பள்ளிகள் மற்றும் ஒரு மாநகராட்சி பள்ளி என 257 பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 139 மாணவர்களும், 17 ஆயிரத்து 513 மாணவிகளும் என மொத்தம் 31 ஆயிரத்து 652 மாணவ-மாணவிகளும், தனித்தேர்வர்களும் எழுதுகின்றனர்.

இந்த நிலையில் பிளஸ்-1 பொதுத்தேர்வு தமிழ் பாடத்துடன் நேற்று தொடங்கியது. தேர்வை எழுதுவதற்காக மாணவ-மாணவிகள் காலையிலேயே தேர்வு மையங்களுக்கு வந்தனர். வீட்டில் பெற்றோர் தங்களது குழந்தைகளை வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து தேர்வு மையத்திற்குள் அனுப்பி வைத்தனர். மேலும் மாணவ-மாணவிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

தேர்வு மையத்திற்குள் செல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவை கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலத்த சோதனைக்கு பின் மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணிக்கு முடிவடைந்தது.

திருச்சி மாவட்டத்தில் தமிழ்பாட தேர்வை மொத்தம் 31 ஆயிரத்து 143 மாணவ-மாணவிகள் எழுதினர். 509 பேர் தேர்வு எழுதவரவில்லை. மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தமிழ்ப்பாடம் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். தேர்வு மையங்களில் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.நாளை ஆங்கில பாடத்தேர்வு நடைபெற உள்ளது. பிளஸ்-1 பொதுத்தேர்வு வருகிற 22-ந்தேதி முடிவடைகிறது. பார்வையற்ற மாணவிகள், ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதினர். 

Next Story