‘நெற்றியில் நாமம் போடுபவர்களை கண்டால் பயமாக இருக்கிறது’ சித்தராமையாவின் கருத்தால் சர்ச்சை


‘நெற்றியில் நாமம் போடுபவர்களை கண்டால் பயமாக இருக்கிறது’ சித்தராமையாவின் கருத்தால் சர்ச்சை
x
தினத்தந்தி 6 March 2019 11:00 PM GMT (Updated: 2019-03-07T03:52:09+05:30)

நெற்றியில் நாமம் போடுபவர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சித்தராமையா கூறிய கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

பெங்களூரு, 

நெற்றியில் நாமம் போடுபவர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சித்தராமையா கூறிய கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

பா.ஜனதா கண்டனம்

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தனது சொந்த தொகுதியான பாதாமியில் நடந்த விழாவில் கலந்துகொண்டார். அங்கு திட்ட பணிகள் தொடக்க விழாவில் சிறப்பு பூஜை நடந்தது. அங்கு பூஜை செய்தவர் நெற்றியில் நாமம் போட்டிருந்தார். அப்போது சித்தராமையா, நெற்றியில் நாமம் போட்டியிருப்பவர்களை பார்த்தால் பயமாக இருக்கிறது என்று கூறினார். இதுதொடர்பான வீடியோ தொலைக்காட்சி மற்றும் சமூகவலைத்தளங்களில் வைரலானது.

சித்தராமையாவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த கருத்துக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் சித்தராமையா இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறி இருப்பதாவது:-

அரசியல் நோக்கத்திற்காக...

ஆம், நெற்றியில் நாமம் போட்டியிருப்பவர்களை பார்த்தால் பயம் ஏற்படுகிறது என்று சொன்னது உண்மை தான். பல்வேறு குற்றம் புரிந்தவர்கள், நெற்றியில் நாமம் போட்டுக் கொண்டு திரிகிறார்கள். இத்தகையவர்கள் மத துரோகிகள் மட்டுமல்ல, சமூக துரோகிகளும் ஆவார்கள். அத்தகையவர்களை மனதில் வைத்தே நான் பேசினேன்.

நான் பா.ஜனதாவினரை விட நல்ல இந்து. நான் எப்போதும், நெற்றியில் வைக்கப்படும் குங்குமம், நாமம், காவி துணியை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தியது இல்லை. நான் மக்கள் நலன் சார்ந்த அரசியல் செய்கிறேன்.

பரம்பரையின் பாகம்

கடவுள், மதம் என அனைத்தும் எனது மனதுக்குள் இருக்கும் நம்பிக்கை. உத்தரபிரதேசத்தில் ஒரு முதல்-மந்திரி இருக்கிறார். அவர் உடல் முழுவதும் காவி துணியும், முகத்தில் குங்குமமும் பயன்படுத்துகிறார். ஆனால் அவர் மீது 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இத்தகைய குங்குமம் வைத்துள்ளவரை பாா்த்தால் மக்களுக்கு பயம் உண்டாகாமல், மரியாதை வருமா?. குங்குமம், நாமம், காவி துணி ஆகியவை இந்திய ஆன்மிக பரம்பரையின் ஒரு பாகம்.

அதற்கு ஒரு புனிதம் உள்ளது. ஆனால் பா.ஜனதாவினர் எப்போது இதையெல்லாம் அரசியலுக்காக பயன்படுத்த தொடங்கினார்களோ, அப்போது இருந்து மக்கள், குங்குமம், காவி துணியை பயன்படுத்துபவர்களை பயத்துடனும், சந்தேகத்துடனும் பார்க்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story