வீட்டை வாடகைக்கு எடுத்து இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய முன்னாள் போலீஸ்காரர் கைது
தூத்துக்குடியில் வீட்டை வாடகைக்கு எடுத்து இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக முன்னாள் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த பெண்ணும் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. சிலர் பெண்களை வீட்டில் தங்க வைத்து இந்த தொழிலில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது. இந்த வகையில் தூத்துக்குடி சுப்பையாபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும், பலர் அங்கு வந்து செல்வதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
குறிப்பிட்ட அந்த வீட்டில் நேற்று அனைத்து மகளிர் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பாலியல் தொழில் நடந்து வருவது தெரியவந்தது. அங்கு இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், முன்னாள் போலீஸ்காரர் சுரேஷ்தனசிங்கை(வயது 37) கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்து வந்த ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டார். அந்த 2பேரும் வீட்டை வாடகைக்கு எடுத்து இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story