பாபநாசம் அகஸ்தியர் அருவி கல்யாண தீர்த்த தடாகத்தில் மூழ்கி வாலிபர் சாவு


பாபநாசம் அகஸ்தியர் அருவி கல்யாண தீர்த்த தடாகத்தில் மூழ்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 7 March 2019 4:15 AM IST (Updated: 7 March 2019 5:01 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் அகஸ்தியர் அருவி கல்யாண தீர்த்த தடாகத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

விக்கிரமசிங்கபுரம்,

புதுச்சேரி மாநிலம் மூலக்குளம் என்.எஸ்.ஜி. போஸ் நகரை சேர்ந்தவர் ரமணி கோபால். இவருடைய மகன் பிரவீன்குமார் (வயது 31). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் பிரவீன்குமார் தனது நண்பர் மூர்த்தி என்பவருடன் சேர்ந்து ரெயிலில் புறப்பட்டு நெல்லை மாவட்டம் தென்காசி வந்தனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் அம்பை வந்தனர். நேற்று மதியம் 2 பேரும் அகஸ்தியர் அருவியில் குளித்துவிட்டு, பின்னர் மேல உள்ள கல்யாண தீர்த்தத்துக்கு சென்றனர்.

அங்குள்ள தடாகத்தில் குளிக்க ஆசைப்பட்ட பிரவீன்குமார், அதில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். மூர்த்தி கரையில் நின்று கொண்டிருந்தார். அப்போது தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த பிரவீன்குமார், திடீரென தண்ணீருக்குள் மூழ்கினார். இதை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இச்சம்பவம் குறித்து உடனடியாக விக்கிரமசிங்கபுரம் போலீசார் மற்றும் அம்பை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். தண்ணீருக்குள் மூழ்கி இறந்து போன பிரவீன்குமார் உடலை மீட்டனர். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story