கந்துவட்டி புகார்: பெயர் குழப்பத்தால் நர்சு குடும்பத்தை வீட்டில் பூட்டிய போலீசார் - நெல்லை அருகே பரபரப்பு


கந்துவட்டி புகார்: பெயர் குழப்பத்தால் நர்சு குடும்பத்தை வீட்டில் பூட்டிய போலீசார் - நெல்லை அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 7 March 2019 4:15 AM IST (Updated: 7 March 2019 5:01 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே கந்துவட்டி புகார் தொடர்பாக விசாரணை நடத்த சென்ற போலீசார், பெயர் குழப்பத்தால் நர்சு குடும்பத்தை வீட்டில் வைத்து பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் கள்ளத்தியான். இவருடைய மனைவி தெய்வானை செல்வி (வயது 35). இவர், 108 ஆம்புலன்சில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

தெய்வானை செல்வி நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றார். கணவர் வெளியூர் சென்று விட்டார். இவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு பாளையங்கோட்டை தாலுகா போலீசார் சென்றனர்.

வீட்டில் கள்ளத்தியானின் பெற்றோர் மற்றும் அவரது 2 குழந்தைகள் இருந்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை ஏதுவும் செய்யாமல், வெளிக்கதவை பூட்டி விட்டு சென்றனர். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறினார்கள்.

நேற்று காலை தெய்வானை செல்வி வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். கதவு வெளியே பூட்டிக்கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது அங்கு போலீசார் வந்தனர்.

உங்கள் கணவர் மீது இதே ஊரைச் சேர்ந்த ஒருவர் கந்துவட்டி புகார் கொடுத்து இருக்கிறார். அதற்கான தான் நாங்கள் இங்கு வந்து வீட்டை பூட்டினோம் என்று போலீசார் கூறினர். அப்போது தெய்வானை செல்வி எனது வீட்டுக்காரர் கந்துவட்டிக்கு பணம் கொடுப்பது இல்லை. நீங்கள் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்றார்.

அந்த நேரத்தில் கந்துவட்டி புகார் கொடுத்தவர் அங்கு வந்தார். அவர், நான் புகார் கொடுத்தது இந்த கள்ளத்தியான் கிடையாது. வேறு ஒரு கள்ளத்தியான் என கூறினார். இதையடுத்து போலீசார் நர்சு குடும்பத்தை சமாதானப்படுத்தி விட்டு புறப்பட்டுச் சென்றனர்.

ஆனால் மன உளைச்சலுக்கு ஆளான தெய்வானை செல்வி நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார் ஆகியோரிடம் தனித்தனியாக மனு கொடுத்தார். அதில், பெயர் குழப்பத்தால் விசாரணை செய்யாமல் எனது வீட்டை பூட்டி சென்ற சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story