வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவலில் ரூ.50 லட்சத்தில் பூலித்தேவனின் நினைவு மாளிகை புதுப்பிப்பு பணிகள் மும்முரம்


வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவலில் ரூ.50 லட்சத்தில் பூலித்தேவனின் நினைவு மாளிகை புதுப்பிப்பு பணிகள் மும்முரம்
x
தினத்தந்தி 7 March 2019 4:45 AM IST (Updated: 7 March 2019 5:05 AM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவலில் பூலித்தேவனின் நினைவு மாளிகை புதுப்பித்தல் பணி தொடங்கப்பட்டுள்ளது.

வாசுதேவநல்லூர்,

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும்செவலில் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் நினைவு மாளிகை உள்ளது. இங்கு வருடந்தோறும் செப்டம்பர் மாதம் 1-ந் தேதி அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மாமன்னர் பூலித்தேவனின் 304-வது பிறந்தநாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்பட உள்ளது. பூலித்தேவன் நினைவு மாளிகை கடந்த 1998-ம் ஆண்டு அப்போதைய தி.மு.க. அரசால் புதுப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் கட்டிடம் பழமையானதால் நினைவு மாளிகையை புதுப்பிக்க வேண்டும் என அனைத்து சமுதாய பொதுமக்கள், அரசியல் கட்சியினர் அரசுக்கும், மனோகரன் எம்.எல்.ஏ.விடமும் மனு கொடுத்தனர். இதுதொடர்பாக மனோகரன் எம்.எல்.ஏ. விடுத்த கோரிக்கையை ஏற்று, பூலித்தேவன் நினைவு மாளிகையை புதுப்பிக்க கடந்த ஆண்டு அவரது பிறந்தநாளில் சுற்றுலாத்துறையின் மூலம் ரூ.50 லட்சம் ஒதுக்கப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து பூலித்தேவன் நினைவு மாளிகையை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு மும்முரமாக நடந்து வருகின்றன. நெல்லை மாவட்ட பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் கட்டுமான பராமரிப்பு துறையின் சார்பில் பூலித்தேவன் நினைவு மாளிகையில் உள்ள தர்பார் மண்டபம், கிரானைட் கல் பதித்தல், ஓவியங்கள் புதுப்பித்தல், நூலகம், மாமன்னர் பூலித்தேவன் பயன்படுத்திய வாள், வேட்டையாட பயன்படுத்திய கற்களை பத்திரப்படுத்தி பாதுகாக்க புதிய கட்டிடம், மேலும் அரசு விழா நடப்பதால் தற்போது சிலை முன்பு உள்ள மாலை போடும் சிறிய படிக்கட்டுகள் அகற்றப்பட்டு புதிய காங்கிரீட் மேடை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இதுகுறித்து சங்கரன்கோவில் பொதுப்பணித்துறை உபகோட்டம் கட்டிடம் மற்றும் கட்டுமான பராமரிப்புத்துறை உதவி பொறியாளர் வைத்திலிங்கம் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு மாமன்னர் பூலித்தேவன் நினைவு மாளிகை முழுவதும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பொதுப்பணித்துறையின் மூலம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் புதுப்பித்தல் பணி விரைந்து முடிக்கப்படும் என்றார். 

Next Story