நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பரபரப்பு: போலீசாரை கண்டித்து அரசு பஸ் டிரைவர்கள் திடீர் போராட்டம்


நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பரபரப்பு: போலீசாரை கண்டித்து அரசு பஸ் டிரைவர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 7 March 2019 11:00 PM GMT (Updated: 7 March 2019 2:41 PM GMT)

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் போலீசாரை கண்டித்து அரசு பஸ் டிரைவர்கள் திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலையில் ஒரு அரசு பஸ் குளச்சலுக்கு புறப்பட்டது. இந்த அரசு பஸ்சுக்கு முன் ஒரு மினி பஸ்சும் சென்றது. அரசு பஸ் டிரைவர் பல முறை ஒலி எழுப்பியும், அரசு பஸ்சுக்கு அந்த மினி பஸ் வழிவிடவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் கலெக்டர் அலுவலகம் அருகே வந்தபோது மினி பஸ்சை, சம்பந்தப்பட்ட அரசு பஸ் முந்திச் செல்ல முயன்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அரசு பஸ் மீது அந்த மினி பஸ் உரசியதாக தெரிகிறது.

இந்த விபத்தில் அரசு பஸ்சின் ஜன்னல் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதைத் தொடர்ந்து 2 பஸ்களையும் நடுரோட்டில் நிறுத்தி விட்டு டிரைவர்கள் சாலையில் இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மற்ற அரசு பஸ் டிரைவர்களும் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டதோடு போக்குவரத்து நெரிசலும் உருவானது.

பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்று டிரைவர்களை அழைத்து பேசினர். அதன் பிறகு விபத்துக்கு காரணமான மினி பஸ்சை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதை தொடர்ந்து அனைத்து டிரைவர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் அங்கு ஏற்பட்டிருந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

நாகர்கோவிலில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக அரசு பஸ் டிரைவர்களுக்கும், மினி பஸ் டிரைவர்களுக்கும் இடையே ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்தது. இதில் அதிகாரிகள் தலையிட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது ஏற்பட்ட தகராறு மூலம் மீண்டும் பிரச்சினை கிளம்பி இருக்கிறது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நேசமணிநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பஸ்சை நடுரோட்டில் நிறுத்தியது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு பஸ் டிரைவரை போலீசார் கண்டித்துள்ளனர். இதனால் போலீசார் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக அரசு பஸ் டிரைவர் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் போலீசாரை கண்டித்து அரசு பஸ் டிரைவர்கள் நேற்று மாலை அண்ணா பஸ் நிலையத்தில் திடீர் போராட்டம் நடத்தினர். அதாவது பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே செல்ல முடியாதபடி 2 அரசு பஸ்களை குறுக்கே நிறுத்தி போராட்டம் நடத்தினர். மேலும் பஸ் நிலையத்துக்கு முன்பும் ஒரு அரசு பஸ்சை ரோட்டின் குறுக்கே நிறுத்தி இருந்தனர். இதன் காரணமாக பஸ் நிலையத்துக்குள் எந்த பஸ்களாலும் செல்ல முடியவில்லை. வெளியே வரவும் முடியாததால் பஸ் நிலையத்துக்குள் அனைத்து பஸ்களும் குறுக்கும், நெடுக்குமாக நின்றன.

இதை தொடர்ந்து கோட்டார் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று டிரைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். அதன் பிறகு அங்கு போக்குவரத்து சீரானது. அண்ணா பஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவர்கள் திடீரென போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story