நாடாளுமன்ற தேர்தலையொட்டி வெளி மாவட்டங்களுக்கு தாசில்தார்களை மாற்றிய உத்தரவு ரத்து


நாடாளுமன்ற தேர்தலையொட்டி வெளி மாவட்டங்களுக்கு தாசில்தார்களை மாற்றிய உத்தரவு ரத்து
x
தினத்தந்தி 7 March 2019 10:15 PM GMT (Updated: 7 March 2019 4:27 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வெளி மாவட்டங்களுக்கு தாசில்தார்களை மாற்றிய உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

வேலூர், 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் முதல் வருவாய்த்துறை அதிகாரிகள், வளர்ச்சித்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் தொடர்ந்து பணியில் இருப்பவர்கள், சொந்த தொகுதியில் பணிபுரிபவர்கள் மாற்றப்படுகிறார்கள். அதேபோன்று வருவாய்த்துறையில் தாசில்தார்கள் சிலர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றப்பட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அப்போது 11 தாசில்தார்கள் அருகில் உள்ள வெளிமாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர். வெளி மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் வெளி மாவட்டங்களுக்கு மாற்றியதை கண்டித்து வருவாய்த்துறை அதிகாரிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. வேலூரில் ஆர்ப்பாட்டம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கடந்த திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வுநாள் கூட்டத்தில் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களுக்கு ரசீது வழங்கும் இடத்தில் அதிகாரிகள் இல்லாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி வெளிமாவட்டங்களுக்கு தாசில்தார்களை மாற்றி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு மாற்றப்பட்ட 11 தாசில்தார்களும் அவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த இடத்திலேயே பணிபுரிவார்கள்.

மாவட்டத்துக்குள் மாற்றப்பட்ட தாசில்தார்கள் மாற்றப்பட்ட இடத்தில் பணிபுரிவார்கள் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story