தேவாலா அருகே, ஊருக்குள் உலா வரும் காட்டுயானை - பொதுமக்கள் பீதி
தேவாலா அருகே ஊருக்குள் உலா வரும் காட்டுயானையால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் வறட்சி நிலவுகிறது. வனப்பகுதியில் போதிய பசுந்தீவனம் கிடைக்காமல் காட்டுயானைகள் விவசாய நிலங்களை தேடி ஊருக்குள் வர தொடங்கி விட்டன. இரவில் ஊருக்குள் புகுந்து வாழை, பாக்கு, தென்னை உள்ளிட்ட பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகின்றன. இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தேவாலா அருகே அம்பலக்கொல்லியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. கடந்த சில நாட்களாக அம்பலக்கொல்லி ஊருக்குள் காட்டுயானை ஒன்று அடிக்கடி உலா வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தேவாலா வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காட்டுயானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் வனப்பகுதிக்குள் காட்டுயானை செல்வதும், மீண்டும் ஊருக்குள் வருவதுமாக உள்ளது. மேலும் வாழை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை தின்று சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
வனப்பகுதியில் பசுந்தீவன தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் உணவு, தண்ணீரை தேடி காட்டுயானை ஊருக்குள் வருகிறது. பட்டப்பகலில் குடியிருப்புகள் வழியாக நடந்து செல்வதால் குழந்தைகள் பாதுகாப்பற்ற சூழலில் பள்ளிக்கூடம் சென்று திரும்புகின்றனர். மேலும் எதிரே வரும் பொதுமக்களை காட்டுயானை தாக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே காட்டுயானை ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story