ஆவத்திபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்


ஆவத்திபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 7 March 2019 10:15 PM GMT (Updated: 7 March 2019 5:46 PM GMT)

ஆவத்திபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.

பள்ளிபாளையம், 

பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு குறித்து நேற்று முன்தினம் இரவு ஒரு மண்டபத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர், நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் (சி.ஐ.டி.யு.), ஜனநாயக விசைத்தறி தொழிலாளர் (ஏ.ஐ.சி.சி.டி.யு.) சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

விசைத்தறி உரிமையாளர்கள் தரப்பில், 8 சதவீத கூலி உயர்வு தரப்படும் என்று கூறினர். ஜவுளி உற்பத்தி செலவு அதிகமாகுதல் மற்றும் விற்பனையாகாமல் இருத்தல் போன்ற காரணங்களால் 8 சதவீதத்துக்கு மேல் கூலி உயர்வு அளிக்க இயலாது, என அவர்கள் கூறினர். சி.ஐ.டி.யு. சங்கத்தினர் 8 சதவீதத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதையடுத்து மீண்டும் வருகிற 13-ந்தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே ஏ.ஐ.சி.சி.டி.யு. சங்கத்தினர் 8 மணி நேர வேலைக்கு ஒரு தறிக்கு ரூ.150 சம்பளம், நூல் ஓட்டும் பெண்களுக்கு கட்டுக்கு ரூ.100 உயர்வு, மேஸ்திரிகளுக்கு ஒரு தறிக்கு ரூ.50 -ம் அதிகமாக கேட்டனர். இந்த கூலி உயர்வு கொடுத்தால் தான் வேலைக்கு செல்வது, இல்லையெனில் வேலைக்கு செல்ல மாட்டோம், எனக்கூறினர்.

இதன்பின்னர் நேற்று ஆவத்திபாளையம் பகுதியில் ஏ.ஐ.சி.சி.டி.யு. தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் செய்தனர். மேலும் தொழிலாளர்கள் ஆவத்திபாளையம் பஸ்நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இதன் காரணமாக ஆவத்திபாளையம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டு இருந்தன.

Next Story