புதுவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளரை இறக்குமதி செய்ய உள்ளனர் பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் ஆரூடம்


புதுவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளரை இறக்குமதி செய்ய உள்ளனர் பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் ஆரூடம்
x
தினத்தந்தி 8 March 2019 4:30 AM IST (Updated: 7 March 2019 11:40 PM IST)
t-max-icont-min-icon

புதுவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட காங்கிரசார் வெளியில் இருந்து வேட்பாளரை இறக்குமதி செய்ய உள்ளனர் என்று பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் கூறினார்.

புதுச்சேரி, 

பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஏழை மக்கள் ரூ.5 லட்சம் வரையிலும் சிகிச்சை பெற வசதியாக பிரதமர் நரேந்திர மோடி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கொண்டுவந்தார். அந்த திட்டத்தை புதுவையில் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மாநிலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக 6 மாதத்துக்கு முன்பே பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த திட்டத்தை சிறப்பாக அமல்படுத்தி உள்ளனர். ஆனால் புதுவை ஆட்சியாளர்கள் பிரதமருக்கு எங்கே நல்ல பெயர் கிடைத்துவிடுமோ என்று தேர்தலை மனதில் கொண்டு அமல்படுத்தவில்லை.

காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கியை காப்பாற்ற போலியாக மருத்துவ சான்றிதழ்களை பெற்று முதல்-அமைச்சர் நிவாரண நிதியை வழங்கி வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ள தொகுதிகளில் காங்கிரஸ்காரர்களுக்கு மட்டும் அந்த நிதி வழங்கப்படுகிறது. முதல்-அமைச்சர் நிவாரண நிதி தவறாக பயன்படுத்தப்படுகிறது.

இதில் முறைகேடு நடப்பதால் கவர்னர் நடவடிக்கை எடுக்கவேண்டும். தற்போது நிலமே இல்லாமல் தேர்தலுக்காக ஏழைகளை ஏமாற்றி உத்தேச பட்டா வழங்குகின்றனர். போலியான வாக்குறுதிகளையும் அளிக்கின்றனர். 3 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.

தற்போது தேர்தலுக்காக பூமிபூஜைகளும் விரைவாக நடக்கின்றன. கடந்த காலங்களில் செய்த வேலைகளுக்கே பொதுப்பணித்துறை ரூ.300 கோடி வரை பாக்கி வைத்துள்ளது. அப்படி இருக்க இப்போது பூஜை போடும் வேலைகள் எங்கே நடக்க போகிறது? பல ஆண்டுகளாக நடக்கும் அரும்பார்த்தபுரம் பாலத்தை கட்டி முடிக்க முடியவில்லை. இந்தநிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு கேட்க சென்றால் அவர்களை மக்கள் விரட்டியடிப்பார்கள். தோல்வி பயத்தால் புதுவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட காங்கிரசார் வெளியில் இருந்து வேட்பாளரை இறக்குமதி செய்ய உள்ளனர். பிளாஸ்டிக் தடை விஷயத்தில் பெருமளவு பணம் கைமாறி உள்ளது. பிளாஸ்டிக் தடையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நாங்கள் நடத்துவோம்.

இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

பேட்டியின்போது துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம், பொதுச்செயலாளர் தங்க.விக்ரமன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story