சுருளிப்பட்டி பகுதியில், ஓடையில் மணல் அள்ளுவதை தடுக்க கோரிக்கை
சுருளிப்பட்டி பகுதியில் உள்ள யானைகெஜம் ஓடையில் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கம்பம்,
கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டி கிழக்குப்பகுதி, மேகமலை அடிவார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட நீரோடைகள் உள்ளன. மழை காலங்களில் மேகமலை வனப்பகுதியில் அதிகப்படியான மழை பெய்யும் போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடைகள் வழியாகச் செல்லும். இந்த ஓடைகள் கூத்தனாச்சி ஓடை மற்றும் யானை கெஜம் ஓடையில் இணைகின்றன. இந்த இரு ஓடைகள் ஒருங்கிணைந்து சுருளிப்பட்டி முல்லைப்பெரியாற்றில் சங்கமமாகின்றன.
இதனால் யானைகெஜம் ஓடையில் அதிகளவு மணல் காணப்படுகிறது.
இந்தநிலையில் நாராயணத்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மணல் வியாபாரிகள் யானைகெஜம் ஓடையில் இருந்து நள்ளிரவு நேரங்களில் டிராக்டர், டிப்பர் லாரிகள் மூலம் மணல் அள்ளிச்செல்கின்றனர். கடந்த சில வாரங்களாக சுருளிப்பட்டி யானைகெஜம் ஓடை பட்டமரம் பகுதியில் பகல் நேரங்களில் மணலை சேகரித்து வைத்துக்கொண்டு நள்ளிரவில் தொடங்கி அதிகாலை வரை அவற்றை டிராக்டர் மற்றும் டிப்பர்லாரி மூலம் அள்ளி செல்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே நிலத்தடிநீர் பாதிப்படையும் வகையில் மணல் அள்ளுபவர்கள் மீது மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story