சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை சாவு, திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பனியன் நிறுவன ஊழியர் குடும்பத்துடன் தர்ணா


சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை சாவு, திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பனியன் நிறுவன ஊழியர் குடும்பத்துடன் தர்ணா
x
தினத்தந்தி 8 March 2019 4:30 AM IST (Updated: 8 March 2019 12:04 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்ததால் பனியன் நிறுவன ஊழியர் குடும்பத்துடன் ஆஸ்பத்திரி முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். தனது மனைவிக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைவைத்தார்.

திருப்பூர்,

திருப்பூர் ஸ்ரீநகரை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 29). இவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு பனியன் நிட்டிங் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சுகர்னியா (26). இவர் கர்ப்பமாக இருந்தார். கடந்த 5-ந் தேதி அவருக்கு பிரசவவலி ஏற்பட்டது. உடனடியாக திருப்பூர் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்துள்ளனர். சுகர்னியாவுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். அதன்பிறகு மாலை 6 மணி அளவில் சுகப்பிரசவத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தையின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 9¼ மணி அளவில் அந்த குழந்தை இறந்தது. தனது குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்காததால்தான் இறந்து விட்டதாக கூறி தங்கராஜ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் குழந்தையின் உடலை பெறாமல் நேற்று மதியம் 12 மணி அளவில் ஆஸ்பத்திரி வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

மதியம் 2 மணி வரை தர்ணா போராட்டம் நீடித்தது. அதன்பிறகு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பாரதி மற்றும் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்களிடம் தங்கராஜ் கூறும்போது, 5-ந் தேதி காலையில் ஆஸ்பத்திரிக்கு எனது மனைவியை அழைத்து வரும்போது பனிக்குடம் உடைந்து விட்டது. எனது மனைவிக்கு சுகப்பிரசவம் ஆகும் என்று டாக்டர்கள் கூறினார்கள். அதன்பிறகு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள். அன்று மாலை சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த 3 மணி நேரம் கழித்த பின்னர் நான் கெஞ்சி கேட்ட பிறகு தான் என்னை குழந்தையை பார்க்க அனுமதித்தனர். அப்போது அவசர சிகிச்சை பிரிவில் குழந்தைக்கு மூச்சு திணறலுக்காக சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று டாக்டர்கள் கூறினார்கள். பின்னர் அன்று இரவு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு செல்ல வேண்டியிருக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்தார்கள்.

பின்னர் இங்கேயே சிகிச்சை மேற்கொள்ளலாம் என்றும் கூறினார்கள். நேற்று(நேற்று முன்தினம்) இரவு எனது குழந்தை இறந்து விட் டது. எனது மனைவிக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை. என்ன நிலைமையில் குழந்தை இருக்கிறது என்ற சரியான விவரத்தை கூட எங்களுக்கு தெரிவிக்கவில்லை. மாறி, மாறி தகவல் தெரிவித்தார்கள். இதுபோல் வேறு யாருக்கும் சம்பவம் நடக்கக்கூடாது. எனது மனைவிக்கு பிரசவம் பார்த்த டாக்டர், செவிலியர்கள், ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என் குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் விவர நகலை கொடுக்கவேண்டும். அதன்பிறகே குழந்தையின் உடலை வாங்குவோம் என்று தெரிவித்தார். இதுகுறித்த புகார் மனுவையும் அரசு டாக்டர்களிடம் தங்கராஜ் கொடுத்தார்.

விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து தர்ணாவை தங்கராஜ் குடும்பத்தினர் கைவிட்டனர். சுகர்னியாவுக்கு தொடர்ந்து அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிரசவம் பார்த்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுத்த பிறகே குழந்தையின் உடலை பெற்றுக்கொள்வதாக தங்கராஜ் தெரிவித்துள்ளார். 

Next Story