எண்ணூர் துறைமுக சாலை பணிக்காக கடைகளை இடிக்க உள்ளதால் மாற்று இடம் கேட்டு அதிகாரிகளை மீனவர்கள் முற்றுகை ஆக்கிரமிப்பு கடைகள் மீட்பு
சென்னை எண்ணூர் துறைமுக இணைப்பு சாலை திட்டத்துக்காக மீன்பிடி துறைமுகம் சாலையில் உள்ள கடைகள் அகற்றப்பட உள்ளதால் மாற்று இடம் கேட்டு அதிகாரிகளை மீனவர்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து மற்றொரு தரப்பினர் ஆக்கிரமித்து இருந்த கடைகளை அதிகாரிகள் மீட்டனர்.
திருவொற்றியூர்,
சென்னை எண்ணூர் துறைமுக இணைப்பு சாலை திட்டப்பணிகள் 90 சதவீதம் முடிவடைந்தன. சென்னை மீன்பிடித்துறைமுகம் சாலையில் 100-க்கும் மேற்பட்ட மீன் விற்பனை செய்யும் கடைகள் உள்ளதால் 1.6 கி.மீ. தூரம் உயர்மட்ட சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.
இதற்காக சென்னை துறைமுகம் சார்பில், 2010-ம் ஆண்டு புதிதாக வேறு இடத்தில் 146 மீன் விற்பனை செய்யும் கடைகளை மீனவர்களுக்கு கட்டிக்கொடுத்தது.
ஆனால் கடற்கரையில் இருந்து தொலைவில் இருப்பதால் அந்த கடைகளை பயன்படுத்த மாட்டோம் எனக்கூறி மீனவர்கள், அந்த கடை சாவிகளை அதிகாரிகளிடம் திருப்பிக்கொடுத்தனர். இதற்கிடையில் பூட்டிக்கிடந்த கடைகளை மீனவர்களில் ஒரு தரப்பினர் தாங்களே திறந்து பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் உயர்மட்ட சாலை பணிக்காக சென்னை மீன்பிடி துறைமுக சாலையில் உள்ள மீன் விற்பனை கடைகள் இடிக்கப்பட உள்ளது. இதை அறிந்த அங்கிருந்த மீனவர்கள், தங்களுக்கு மீண்டும் புதிய கடைகளை தரவேண்டும். இல்லை என்றால் மாற்று இடம் வழங்க வேண்டும். அப்போது தான் இந்த இடங்களை காலி செய்து தருவோம் என்று கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.
இதையடுத்து துறைமுக முதன்மை செயல் அதிகாரி துரைபாண்டி, மீன்வள துறை உதவி இயக்குனர் சுதா, தண்டையார்பேட்டை தாசில்தார் லட்சுமி, வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் கலைசெல்வன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ள 140 கடைகளின் பூட்டை வெல்டிங் எந்திரம் மூலம் அகற்றி, கடைகளில் வைத்து இருந்த பொருள்களை அப்புறப்படுத்தினர்.
இதனால் அந்த மீனவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடைகளில் இருந்த பூட்டுகளை அகற்றி ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் மீட்டனர்.
Related Tags :
Next Story