சுங்குவார்சத்திரம் அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை கணவர் விஷம் குடித்தார்
சுங்குவார்சத்திரம் அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது கணவர் விஷம் குடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்த கப்பாங்கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகள் சத்தியவாணி (வயது 25). காஞ்சீபுரத்தை அடுத்த முசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சதீஷ் (25). சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சத்தியவாணி, சதீஷ் இருவரும் வேலை செய்து வந்தனர்.
இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அவர்கள் இருவரும் பல இடங்களில் தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர். அவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. சத்தியவாணியின் பெற்றோர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும் பின்னர் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் சதீஷின் பெற்றோர் இவர்களது திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி சதீஷ் சத்தியவாணியை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.
சத்தியவாணியின் ஊரான கப்பாங்கோட்டூரில் வீடு வாடைகைக்கு எடுத்து இருவரும் தங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக தொடங்கினர். அவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளான சதீஷ் தினந்தோறும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் சத்தியவாணி கணவர் சதீசுடன் கோபித்துக்கொண்டு அடிக்கடி தாய் வீட்டுக்கு சென்றுவிடுவார். அவரது பெற்றோர் சமாதானம் செய்து மகளை கணவர் வீட்டுக்கு அனுப்பி வைப்பர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந்தேதி இரவு சதீசுக்கும், சத்தியவாணிக்கும் தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் இருவரும் தூங்க சென்றனர். மன உளைச்சலில் இருந்த சத்தியவாணி அன்றைய தினம் இரவு தூக்குப்போட்டு உயிருக்கு போராடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு இருந்தவர்கள் ஓடி வந்து உயிருக்கு போராடிய சத்தியவாணியை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே சதீஷ் விஷம் குடித்து ஊயிருக்கு போராடினார். அவரை அககம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சத்தியவாணி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story