மாரண்டஅள்ளி அருகே ரெயில் மோதி விவசாயி சாவு கிராமத்தில் இறுதி சடங்கு செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு


மாரண்டஅள்ளி அருகே ரெயில் மோதி விவசாயி சாவு கிராமத்தில் இறுதி சடங்கு செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 March 2019 4:00 AM IST (Updated: 8 March 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

மாரண்டஅள்ளி அருகே ரெயில் மோதி இறந்த விவசாயியின் உடலுக்கு கிராமத்தில் இறுதி சடங்கு செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள சீங்கேரி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 31). விவசாயி. இவர் நேற்று காலை மாரண்டஅள்ளி பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தர்மபுரி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த வழியாக சென்ற ரெயில் மோதி முனியப்பன் இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து ரெயில்வே போலீசார் முனியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்து உடலை முனியப்பனின் குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவர்கள் முனியப்பனின் உடலை சீங்கேரியில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து சென்று இறுதி சடங்கு செய்ய முயன்றனர்.

அப்போது கிராமத்தை சேர்ந்த சிலர், ரெயில் மோதி இறந்தவரின் உடலுக்கு கிராமத்தில் இறுதி சடங்கு செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த முனியப்பனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அந்த நபர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் சம்ருதீன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இருதரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டது.

பின்னர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், முனியப்பனின் உடலுக்கு இறுதி சடங்கு செய்து அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர். இறந்தவரின் உடலுக்கு இறுதி சடங்கு செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story