வெள்ளாற்றில் தடுப்பணை கட்டக்கோரி புவனகிரியில் கடையடைப்பு போராட்டம்


வெள்ளாற்றில் தடுப்பணை கட்டக்கோரி புவனகிரியில் கடையடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 8 March 2019 3:45 AM IST (Updated: 8 March 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளாற்றில் தடுப்பணை கட்டக்கோரி புவனகிரியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.

புவனகிரி,

கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆனால் தடுப்பணை கட்டுவதற்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புவனகிரி மற்றும் கீரப்பாளையம் வர்த்தகர் சங்கங்கள், விவசாயிகள் சங்கம், அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தனர்.

அதன்படி புவனகிரி மற்றும் கீரப்பாளையம் பகுதியில் நேற்று காலையில் இருந்தே அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. 150-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்ததால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் புவனகிரி கடை வீதிகள் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் புவனகிரி மற்றும் கீரப்பாளையம் பகுதி பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைக்குகூட பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டனர். சிலர் பொருட்கள் வாங்குவதற்காக சிதம்பரத்துக்கு சென்றனர்.

இதுகுறித்து புவனகிரி நகர வர்த்தக சங்க தலைவர் ரத்தினசுப்பிரமணியன் கூறியதாவது:-

புவனகிரியில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டாததால் கடல் நீர் ஆற்றுக்குள் உட்புகுந்து விடுகிறது. இதனால் புவனகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீரின் தன்மை மாறி உள்ளது. குடிநீர் உப்பு நீராக மாறி விட்டது. இந்த தண்ணீரை குடிக்கவும் பயன்படுத்த முடியவில்லை. விவசாயத்துக்கும் பயன்படுத்த முடியவில்லை. வேறு வழியின்றி விவசாயத்துக்கு பயன்படுத்தினாலும் நல்ல மகசூல் கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கிறார்கள். எனவே வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். விருத்தாசலம்- பரங்கிபேட்டை சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. அந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும், கடலூரில் இருந்து சிதம்பரம் மார்க்கமாக செல்லும் பஸ்களும், சிதம்பரத்தில் இருந்து கடலூர் மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும் புவனகிரி வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story