நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி “தே.மு.தி.க.வினர் நல்ல முடிவு எடுப்பார்கள்” - தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை
“நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து சமூக அக்கறை கொண்ட தே.மு.தி.க.வினர் நல்ல முடிவு எடுப்பார்கள்“ என்று தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் கட்சி கொடியேற்று விழாக்களில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. அனைத்து தலைவர்களும் மேடையில் இருந்தனர். அவர்கள் நல்ல கூட்டணி அமைத்து உள்ளோம் என்பதை பறைசாற்றினர். நாங்கள் மிக வலிமையாக பணியாற்றி வருகிறோம். தேர்தல் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடத்தி வருகிறோம். தமிழகத்தில் நல்ல கூட்டணி அமைத்து உள்ளோம். அனைத்து இடங்களையும் பெறும் கூட்டணியாக அ.தி.மு.க, பா.ஜனதா, பா.ம.க. புதிய தமிழகம் கூட்டணி அமையும் என்பது எனது கருத்து.
எங்களிடம் தே.மு. தி.க.வினர் நட்புறவோடு, நேர்மையாக பேச்சுவார்த்தை நடத்தினர். சுதீஷ் ஆரம்பத்தில் இருந்தே பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற போகிறோம் என்று தெளிவாக கூறி இருந்தார். பேச்சுவார்த்தையும் அந்த வகையிலேயே நடந்தது. அவர்கள் இன்னும் சில நாட்கள் கழித்து முடிவு எடுப்பார்கள் என்று நினைக்கிறேன். தமிழகத்தில் நேர்மறையான அரசியல் வர வேண்டும். ஆகையால் சமூக அக்கறை கொண்ட தே.மு.தி.க.வினர் நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.
பா.ம.க.வினர் பல கோரிக்கைகள் வைத்து உள்ளனர். சில கோரிக்கைகள் உடனடியாகவும், சில கோரிக்கைகள் சட்ட விதிகளுக்கு உட்பட்டும், சில கோரிக்கைகள் இப்படித்தான் செய்ய முடியும் என்று விளக்கப்படலாம். ஆகையால் இன்னும் கால அவகாசம் உள்ளது.
பனை தொழிலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பனை போன்று பொருளாதாரத்தை மேம்படுத்தும் மரத்தை இன்னும் அதிகம் ஊக்கப்படுத்த வேண்டும். பனை இன்னும் பெருக வேண்டும். மோடியின் ஸ்டார்ட்அப் இந்தியா, முத்ரா கடன் திட்டம் ஆகியவை சிறு, குறு தொழில் செய்பவர்களை ஊக்கப்படுத்துவதாக உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பனை தொழிலையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று பிரதானமாக வலியுறுத்த உள்ளேன்.
தூத்துக்குடி மட்டுமின்றி, நாங்கள் போட்டியிடும் ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் அறிக்கை தயாரிக்கிறோம். அதில் பனை தொழில் பிரதான இடத்தை பெற்று இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story