தஞ்சை மாவட்டத்தில் 3¾ லட்சம் கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி கலெக்டர் தகவல்


தஞ்சை மாவட்டத்தில் 3¾ லட்சம் கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 8 March 2019 4:15 AM IST (Updated: 8 March 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் 3¾ லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது என்று கலெக்டர் அண்ணாதுரை கூறி உள்ளார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கால்நடைத் துறையின் மூலம் 16-வது சுற்று கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போடும் பணி மேற்கொள்வது தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோயை தடுப்பதற்காக தமிழக அரசு கால்நடை துறையின் மூலம் அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்கு இலவசமாக 16-வது சுற்றாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது

கோமாரி நோய் தடுப்பூசி வருகிற 15-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந்தேதி வரை தொடர்ந்து 21 நாட்களுக்கு அந்தந்த கிராமங்களுக்கே சென்று கால்நடை மருத்துவர்களால் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படவுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 3.73 லட்சம் கால்நடைகளுக்கு 100 சதவிகித தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ள கால்நடை உதவி மருத்துவரின் தலைமையில் 98 குழுக்களும், தடுப்பூசி பணி மேற்பார்வையிட ஒன்றிய அளவில் 8 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விடுபட்ட கால்நடைகளுக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி முதல் 7 நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. கோமாரி நோய் தடுப்பூசி அளிக்கப்படும் இடம் குக்கிராமம் வாரியாக தேதி, நேரம் ஆகியவை அனைத்து ஊராட்சி செயலர்களுக்கு தெரிவிக்கப்படும். ஊராட்சி செயலர்கள் தங்கள் கிராமத்திற்கு கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படவுள்ளதை ஒலிபெருக்கி மற்றும் நோட்டீஸ் வாயிலாக பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த வாய்ப்பை விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

கூட்டத்தில் கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்செல்வம், துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் கால்நடைத்துறை மருத்துவர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story