கோடை காலத்துக்கு முன்பே சுட்டெரிக்கும் வெயில்: பேராவூரணியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்


கோடை காலத்துக்கு முன்பே சுட்டெரிக்கும் வெயில்: பேராவூரணியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 8 March 2019 4:15 AM IST (Updated: 8 March 2019 12:55 AM IST)
t-max-icont-min-icon

கோடை காலத்துக்கு முன்பே சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பேராவூரணியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பேராவூரணி,

தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் கடந்த ஆண்டு (2018) நவம்பர் மாதம் கஜா புயலில் ஏராளமான தென்னை, மா, பலா, தேக்கு மரங்கள் அதிகளவில் சாய்ந்து விழுந்தன. இதனால் நிழல்பாங்காக காட்சி அளித்த பேராவூரணி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் தற்போது வெயில் சுட்டெரிக்கிறது.

கோடை காலத்துக்கு முன்பாகவே வெயில் சுட்டெரிக்க தொடங்கி இருப்பதால், பேராவூரணி பகுதியில் உள்ள குளங்கள் வறண்டு வருகின்றன. கடந்த மாதம் வரை முழுமையாக நிரம்பி இருந்த பேராவூரணி பெரிய குளத்தில் தற்போது சிறிதளவே தண்ணீர் தேங்கி உள்ளது.

முன்பெல்லாம் ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதமே வெயில் கடுமையாக இருப்பதால் நண்பகல் நேரங்களில் மக்கள் வெளியே வருவதற்கே அச்சப்பட்டு, வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். பேராவூரணி கடை வீதியில் தர்ப்பூசணி, வெள்ளரி பிஞ்சுகள் விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

கடும் வெயில் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பேராவூரணி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கூறியதாவது:-

கடைமடை பகுதியான பேராவூரணி பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பி பல ஆண்டுகள் ஆகி விட்டன. காவிரி தண்ணீர் இப்பகுதிக்கு முழுமையாக கிடைப்பதே இல்லை. ஏரிகள், குளங்களில் எப்போதும் தண்ணீரை நிரப்பி வைக்க தேவையான எந்த நடவடிக்கையையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.

ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் குளம், குட்டை, ஏரிகளை நிரப்பாமல் வீணாக கடலில் கலக்கிறது. கடந்த ஆண்டு மேட்டூர் அணை 4 முறை முழு கொள்ளளவை எட்டியபோதும், கடைமடை பகுதிக்கு எந்த பயனும் இல்லை. இந்த நிலையில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.

கோடை காலத்தை சமாளிக்க அதிகாரிகள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக தொடங்குவது அவசியம் ஆகும். கிராமங்களில் லாரிகள் மூலமாக குடிநீர் வினியோகம் செய்வது, தேவையான இடங்களில் ஆழ்துளை கிணறுகளை அமைப்பது, கைப்பம்புகளை அமைப்பது உள்ளிட்ட பணிகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

மேலும் மழை காலத்தில் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை முறையாக குளங்களிலும், ஏரிகளிலும் சேமித்து வைக்கவும் நடவடிக்கை தேவை.

இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.

Next Story