கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் சாலையோரங்களில் 3 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் தலைமை பொறியாளர் தகவல்


கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் சாலையோரங்களில் 3 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் தலைமை பொறியாளர் தகவல்
x
தினத்தந்தி 8 March 2019 4:30 AM IST (Updated: 8 March 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள சாலையோரங்களில் 3 லட்சம் மரக்கன்றுகள் ஒரு ஆண்டுக்குள் நடப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் கூறினார்.

திருச்சி,

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஏராளமான சாலையோர மரங்கள் சாய்ந்து விழுந்தன. புயலால் வீழ்ந்த மரங்களுக்கு பதிலாக மாநில, மாவட்ட சாலையோரங்களில் புதிதாக மரக்கன்றுகள் நடுவதற்கு தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது.இந்த திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நேற்று திருச்சியில் உள்ள நெடுஞ்சாலை துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சாந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் அரசமரம், புங்கமரம், வேம்பு, பூவரசு, மகிழம் உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கஜா புயல் தாக்கத்தின்போது திருச்சி வட்டத்தில் மட்டும் நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த சுமார் 21 ஆயிரம் மரங்கள் சாய்ந்து விழுந்தன. ஒட்டு மொத்தமாக தமிழக அளவில் சுமார் 30 ஆயிரம் மரங்கள் விழுந்தன. இப்படி சாய்ந்து விழுந்த மரங்கள் அனைத்தும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களால் அப்புறப்படுத்தப்பட்டன.

கஜா புயலில் சாய்ந்த ஒரு மரத்திற்கு 10 மரங்கள் (1:10) என்ற திட்டத்தின் அடிப்படையில் தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரங்கள் நடப்பட இருக்கிறது. இதன்படி மாநிலம் முழுவதும் சுமார் 3 லட்சம் மரக்கன்றுகள் ஒரு ஆண்டுக்குள் நடப்படும்.

ஓசோன் படலத்தை பாதுகாத்திடவும், புவி வெப்பமயமாதலை தடுக்கவும் தமிழக அரசின் கொள்கையான, பசுமையான சாலைகளை உருவாக்கும் திட்டத்தின் கீழ் இந்த மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இந்த மரக்கன்றுகள் சாலைப்பணியாளர்கள் மூலம் தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்படும். சாலையோர மரங்களை கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட நன்கொடையாளர்கள் பராமரிக்க விரும்பினால் அவர்களையும் நெடுஞ்சாலைத்துறை வரவேற்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து கஜா புயல் பாதிப்பின்போது சிறப்பாக நிவாரண பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு தலைமை பொறியாளர் சாந்தி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். திருச்சி வட்ட மேற்பார்வை பொறியாளர் பழனி, கோட்ட பொறியாளர்கள் கிருஷ்ணசாமி (திருச்சி), சரவண செல்வம் (தஞ்சாவூர்), சேதுபதி (புதுக்கோட்டை), சிவகுமார் (திருவாரூர்) இளம்வழுதி (நாகப்பட்டினம்) உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Next Story