குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் - திருக்கோவிலூர் அருகே பரபரப்பு
திருக்கோவிலூர் அருகே குடிநீர் வழங்க கோரி காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள முகையூர் ஒன்றியம் அரசங்குப்பம் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, மின்மோட்டார் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அப்பகுதியில் ஏற்பட்ட வறட்சி காரணமாக ஆழ்துளை கிணறு தண்ணீரின்றி வறண்டது. இதனால் கடந்த சில வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக கிராம மக்கள் பெரிதும் அவதியடைந்து வந்தனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மாற்று ஏற்பாடு செய்து குடிநீர் வழங்க கோரி முகையூர் ஒன்றிய அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை காலி குடங்களுடன் அங்குள்ள நாயனூர்-ஆதிச்சனூர் சாலையில் திரண்டனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு தினசரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பியபடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், குடிநீர் பிரச்சினை குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்ற கிராம மக்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் நாயனூர்-ஆதிச்சனூர் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story