செங்கத்தில் ஆதரவற்ற 3 குழந்தைகளுக்கு பாதுகாவலராக கலெக்டர் நியமனம்
செங்கத்தில் ஆதரவற்ற 3 குழந்தைகளுக்கு பாதுகாவலராக கலெக்டர் கந்தசாமி நியமனம் செய்யப்பட்டார்.
செங்கம்,
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த குப்பனத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சுஜித்ரா (வயது 16). இவருடைய தந்தை ராஜா. இவர், கடந்த 2009-ம் ஆண்டும், தாய் மஞ்சுளா கடந்த ஜனவரி மாதமும் இறந்துவிட்டனர். சுஜித்ரா, அவரது தங்கை சுமித்திரா (15), தம்பி வெங்கடகிருஷ்ணன் (11) ஆகியோர் பாட்டி நீலம்மாளுடன்(61) வசித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக தனது பெரியப்பா சேட்டு, அவரது மனைவி சித்ரா, மகன் மணிகண்டன் உள்ளிட்டோர் தங்களை மிரட்டுவதாகவும், கீழ்த்தரமாக நடத்துவதாகவும், தங்கள் சொத்துக்களை அபகரிக்க முயல்வதாகவும் கடந்த 4-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் சுஜித்ரா மனு அளித்தார்.
இந்த மனு குறித்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து மாவட்ட சமூக நல அலுவலக குடும்ப வன்முறை தடுப்பு சட்ட பாதுகாப்பு அலுவலர் நேரடி விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று செங்கம் பதிவுத்துறை அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரை ‘குழந்தைகள் பாதுகாவலர் சட்டம் 1890’-ன் படி ஆதரவற்ற குழந்தைகள் உரிய வயது அடையும் வரை அவர்களையும், அவர்களது சொத்துக்களையும் பாதுகாக்க பாதுகாவலராகவும் நியமனம் செய்து பதிவு செய்யப்பட்டது.
மேலும் ஆதரவற்ற குழந்தைகளை காப்பகத்தில் தங்கி படிக்கவும், அவர்களது கல்வி செலவையும் அரசே ஏற்கும் எனவும் கலெக்டர் கந்தசாமி கூறினார். இதைத்தொடர்ந்து கலெக்டருக்கு ஆதரவற்ற குழந்தைகள் நன்றி கூறினர்.
அப்போது திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி, தாசில்தார் பார்த்தசாரதி, துணை தாசில்தார்கள் துரைராஜ், முனுசாமி, வட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன், சார்பதிவாளர் ஜெயச்சந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story