பிரதமர், முதல்-அமைச்சரை நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு கேட்க விவசாயிகள் அனுமதிக்க மாட்டார்கள் பி.ஆர்.பாண்டியன் பேட்டி


பிரதமர், முதல்-அமைச்சரை நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு கேட்க விவசாயிகள் அனுமதிக்க மாட்டார்கள் பி.ஆர்.பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 7 March 2019 11:00 PM GMT (Updated: 7 March 2019 7:50 PM GMT)

தமிழக விவசாயிகள் பிரதமர் மோடியையும், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் வாக்கு கேட்க விவசாயிகள் அனுமதிக்க மாட்டார்கள் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

பெரம்பலூர்,

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், நாடாளுமன்ற தேர்தல் 2019 பிரச்சினைகளும், தீர்வுகளும், விவசாயிகள் சந்திப்பு எனும் தமிழகம் தழுவிய பரப்புரை பயணத்தை கடந்த 1-ந் தேதி தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பென்னி குயிக் மணிமண்டபம் அருகே தொடங்கினர். இந்த பரப்புரை பயணம் பெரம்பலூருக்கு நேற்று வந்தடைந்தது. பெரம்பலூர் புதிய பஸ் நிலைய வளாகத்தில் பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் பயணக் குழுவினர் வழங்கி பேசினர். அப்போது தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 5 ஆண்டு காலமாக பிரதமர் மோடி அரசு விவசாயிகளுக்கு விரோதமான ஆட்சியை செய்தது. அவர் விவசாய கடன் தள்ளுபடி அளிக்க மறுப்பு தெரிவித்தார். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு லாபகரமான விலையை பரிந்துரைத்த எம்.எஸ்.சாமிநாதன் குழு அறிக்கையை நிறைவேற்ற மறுத்தார்.

குறிப்பாக, கேரளாவுக்கும், தமிழகத்திற்கும் இடையேயான முல்லை பெரியாறு பிரச்சினை, தமிழகம், கர்நாடக மாநிலங்களுக்கிடையே காவிரியில் பிரச்சினை ஆகியவற்றில் தலையிட்டு, கடந்த 5 ஆண்டு காலம் தென்னக உறவுகளை சீர்குலைக்க முயற்சித்தார். காவிரி குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கொடுத்துவிட்டு, கோதாவரியை காவிரியுடன் இணைப்பேன் என்கிறார். இது மோசடியான திட்டமாகும். அடுத்த பிரசார கூட்டத்தில், மோடியுடன் தமிழக முதல்- அமைச்சர் பங்கேற்கும் போது, முல்லை பெரியாறு, காவிரி பிரச்சினை குறித்து தனது நிலையை மோடி தெரிவிக்க வேண்டும். மேலும் முல்லைப் பெரியாறு அணை, மேகதாது அணை குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில், தமிழக விவசாயிகள் ஒன்றிணைந்து பிரதமர் மோடியும், தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வாக்கு கேட்க விவசாயிகள் அனுமதிக்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தஞ்சாவூர் புண்ணியமூர்த்தி, பாலாறு வெங்கடேசன், மதுரை ஆதிமூலம், நாகப்பட்டினம் ராமதாஸ், தர்மபுரி சின்னசாமி, மன்னார்குடி மனோகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 

Next Story