கோவையில், போலி ஐ.பி.எஸ். அதிகாரி கைது - இந்திய தண்டனை சட்டப்பிரிவை தவறாக கூறியபோது சிக்கினார்
கோவையில் போலி ஐ.பி.எஸ். அதிகாரி கைது செய்யப்பட்டார். இந்திய தண்டனை சட்டப்பிரிவை தவறாக கூறியபோது அவர் சிக்கினார்.
கோவை,
கோவை சுந்தராபுரத்தில் உள்ள ஆண்டாள் தோட்டத்தில் வாடகை வீட்டில் வசிப்பவர் பானுமதி. இவருக்கும், இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கும் தகராறு இருந்து வந்தது. இதுகுறித்து பானுமதி, காளப்பட்டி, கருப்பராயம்பாளையத்தில் வசிக்கும் தனது உறவினரான சூரஜ்குமாரிடம்(வயது 35) தெரிவித்தார்.
இதைதொடர்ந்து நேற்று காலை சுந்தராபுரத்தில் உள்ள பானுமதியின் வீட்டுக்கு சூரஜ்குமார் சென்றார். அங்கிருந்து போத்தனூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மகேஸ்வரனுக்கு போன் செய்து, ‘நான் ஐ.பி.எஸ். அதிகாரி, ஐதராபாத் சிறப்பு அதிரடிப்படையில் துணை போலீஸ் கமிஷனராக இருக்கிறேன். உடனடியாக 2 போலீசுடன் சுந்தராபுரம் ஆண்டாள் தோட்டம் பகுதிக்கு வரவேண்டும். எனது மாமியார் பானுமதியிடம் இருவர் தகராறு செய்து வருகிறார்கள். அவர்களை கைது செய்யுங்கள்’ என புகார் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன், போலீசாருடன் அங்கு விரைந்து சென்று, சூரஜ்குமாருக்கு சல்யூட் அடித்து, பிரச்சினை குறித்து பவ்யமாக விசாரித்தனர். ஆனால் சூரஜ்குமாரின் பேச்சு மற்றும் அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.
தன்னுடைய மாமியாருடன் தகராறு செய்த இருவரையும் 302 சட்டப்பிரிவில் கைது செய்யுமாறு சூரஜ்குமார் கூறினார். இந்திய தண்டனை சட்டப்பிரிவு 302, கொலை வழக்கு குற்றவாளிகள் மீது பதிவு செய்வது ஆகும். ஆனால் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் வாய்தகராறுக்கு கொலை வழக்குப்பதிவு செய்ய சொல்கிறாரே? என இன்ஸ்பெக்டருக்கு மேலும் சந்தேகம் வலுத்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் நிலையத்துக்கு சென்று பேசிக்கொள்ளலாம் என்று சூரஜ்குமாரிடம் இன்ஸ்பெக்டர் கூறினார். உடனே சூரஜ்குமார், ‘நான் எதுக்குப்பா அங்கெல்லாம்’ என்று கூறி சூரஜ்குமார் வர மறுத்துள்ளார். ‘ஐயா, எங்கள் ஊர் போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகளை நீங்கள் பார்க்க வேண்டாமா? சிறிது நேரத்தில் போலீஸ் நிலையத்தில் இருந்து எனது வாகனத்திலேயே உங்களை அனுப்பி விடுகிறேன்’ என இன்ஸ்பெக்டர் கூறியதால் வேறுவழியின்றி சூரஜ்குமார் போலீஸ் ஜீப்பில் ஏறி போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.
அவருடைய மாமியார் பானுமதி, தகராறில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவரையும் போத்தனூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
போலீஸ் விசாரணையில் சூரஜ்குமார் பி.டெக், எம்.பி.ஏ. மற்றும் ஆஸ்திரேலியாவில் எம்.எஸ். படித்தவர் என்றும் சிங்காநல்லூரில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருவதும் தெரியவந்தது. இவருடைய மாமியார் பானுமதி, வீட்டின் உரிமையாளருக்கு கடந்த 10 மாதங்களாக வாடகை தராமல் பாக்கி வைத்திருந்ததும், இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டபோது, வீட்டு உரிமையாளர் உள்பட 2 பேரை சூரஜ்குமார் மிரட்டியதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் தனக்கு சாதகமாக நடவடிக்கை எடுப்பதற்காக போலி ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்ததும் தெரியவந்தது.இதைதொடர்ந்து சூரஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். சூரஜ்குமார் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 170( அரசு அதிகாரிபோல் ஆள்மாறாட்டம் செய்வது), 294(பி) கெட்டவார்த்தையால் திட்டுவது, 506(1) கொலை மிரட்டல் விடுப்பது ஆகிய 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story