ஈரோடு மாட்டுச்சந்தையில் 57 பேருக்கு மறுவாழ்வு அளிக்க மாடுகளை வாங்கிய போலீசார்


ஈரோடு மாட்டுச்சந்தையில் 57 பேருக்கு மறுவாழ்வு அளிக்க மாடுகளை வாங்கிய போலீசார்
x
தினத்தந்தி 8 March 2019 4:30 AM IST (Updated: 8 March 2019 2:42 AM IST)
t-max-icont-min-icon

57 பேருக்கு மறுவாழ்வு அளிக்க ஈரோடு மாட்டுச்சந்தையில் இருந்து மாடுகளை மது விலக்கு போலீசார் வாங்கினார்கள்.

ஈரோடு,

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இதில் விவசாயிகள் கறவை மாடுகளை மட்டும் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இந்த வாரத்துக்கான சந்தை நேற்று கூடியது. ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் 400 பசு மாடுகளும், 300 எருமை மாடுகளும், 250 வளர்ப்பு கன்றுக்குட்டிகளும் கொண்டு வரப்பட்டு இருந்தது.

இந்த மாடுகளை வாங்குவதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, மராட்டியம், தெலுங்கானா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர். அவர்கள் விவசாயிகளிடம் விலைபேசி தங்களுக்கு தேவையான மாடுகளை பிடித்து லாரிகளில் ஏற்றி கொண்டு சென்றனர்.

திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு போலீசாரும் மாட்டுச்சந்தைக்கு வந்தனர். சாராயம் காய்ச்சுதல், கஞ்சா விற்பனை செய்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக திருப்பூர் மாவட்ட கலால் உதவி ஆணையாளர் சக்திவேல் மற்றும் மதுவிலக்கு போலீசார், மாடுகளை விலை பேசினர். இதில் பெண்கள் உள்பட மொத்தம் 57 பேருக்கு கொடுப்பதற்காக தலா ஒரு மாடு வீதம் மொத்தம் 57 மாடுகளை போலீசார் வாங்கி சென்றனர்.

இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் ஒருவர் கூறியதாவது:-

சமூக விரோத செயல்களில் ஈடுபட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டு, சிறை தண்டனை முடிந்த பிறகு திருந்தி வாழ்ந்து வருபவர்களுக்கு மறுவாழ்வு புனரமைப்பு திட்டம் மூலம் அரசு நிதி ஒதுக்கி வருகிறது. சுயதொழில் புரிவதற்கு ஒருவருக்கு ரூ.30 ஆயிரம் நிதி ஒதுக்கப்படும். அவர்கள் எந்த தொழிலை விரும்புகிறார்களோ அதற்கு நிதி அளிக்கப்படும். அதன்படி 57 பேருக்கு கறவை மாடுகள் கொடுப்பதற்காக மாடுகளை வாங்கினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story