டாப்சிலிப் முகாமில் வளர்ப்பு யானை தாக்கி பாகனின் மகன் சாவு


டாப்சிலிப் முகாமில் வளர்ப்பு யானை தாக்கி பாகனின் மகன் சாவு
x
தினத்தந்தி 8 March 2019 4:15 AM IST (Updated: 8 March 2019 2:51 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலையை அடுத்த டாப்சிலிப்பில் உள்ள முகாமில், வளர்ப்பு யானை தாக்கியதில் பாகனின் மகன் பரிதாபமாக இறந்தார்.

ஆனைமலை,

ஆனைமலையை அடுத்த டாப்சிலிப் வனச்சரகத்துக்குட்பட்ட கோழிக்கமுத்தி முகாமில் 9 பெண் யானைகள் உள்பட 25 யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில் 5 யானைகள் கும்கி யானைகளாகும். ஒவ்வொரு யானைக்கும் தனித்தனியே பாகன்களும், ஒரு உதவியாளரும் வனத்துறையினரால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்த யானைகளை தினசரி பராமரிப்பது, உணவு கொடுப்பது, வனப்பகுதி மற்றும் நீர்நிலைகளுக்கு அழைத்து சென்று வருவது உள்ளிட்ட பணிகளை செய்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை சுமார் 4.30 மணிக்கு வழக்கம்போல் முகாமை ஒட்டி உள்ள வனப்பகுதியில் வளர்ப்பு யானைகள் சுதந்திரமாக சுற்றித்திரிந்தன. முகாமை ஒட்டிய மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்த அய்யப்பன் (வயது 27) என்பவர் வனப்பகுதி வழியாக நடந்து சென்றார். அப்போது அங்கிருந்த வளர்ப்பு யானையான துர்கா என்கிற பெண்யானை எதிர்பாராதவிதமாக அய்யப்பனை துதிக்கையால் தள்ளி விட்டு, கால்களால் மிதித்தது. இதில் அய்யப்பன் படுகாயம் அடைந்தார்.

இதனை பார்த்ததும், முகாமில் இருந்த யானை பாகன்கள் மற்றும் உதவியாளர்கள் ஓடிச்சென்று, அய்யப்பனை மீட்டு வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி அய்யப்பன் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்து போன அய்யப்பனின் தந்தை கருப்புசாமி. இவர் வளர்ப்பு யானை முகாமில் பாகனாக பணிபுரிந்து வருகிறார். அய்யப்பனுக்கு பரிமளா என்கிற மனைவியும், அஞ்சு (7), அல்லி (6) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

Next Story