விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு குற்றச்சாட்டு


விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 March 2019 4:30 AM IST (Updated: 8 March 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் முன்பே அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேளாண்மைத்துறை சார்பில், கூட்டுப்பண்ணைத் திட்டத்தின் கீழ் உழவர் குழுக்களுக்கு பண்ணை எந்திரங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் முன்னிலை வகித்தார். விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

விவசாயிகளின் நலன் கருதி அத்திக்கடவு- அவினாசி திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. கோதாவரி- காவிரி ஆறுகளை இணைக்கும் திட்டமும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. விவசாயம் செய்ய போதிய ஆட்கள் இல்லை. கரும்பில் இருந்து கிடைக்கும் எத்தனாலைப் பெட்ரோல், டீசலுடன் கலந்து பயன்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். இதன் மூலம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் நலனை பேணி காக்கும் அரசாக இந்த அரசு திகழ்ந்து வருகிறது. விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்கு முன்பே அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள். இது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. இதை கருத்தில் கொண்டு ஈரோடு, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் நவீன முறையில் மிகப்பெரிய அளவில் குளிரூட்டப்பட்ட பதனிடும் நிலையம் அமைக் கப்பட உள்ளன. இதில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை நீண்ட நாட்கள் வைத்திருந்து நல்ல விலை கிடைக்கும் போது விற்பனை செய்து கொள்ளலாம். இது தேர்தல் முடிந்த பிறகு தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து 44 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானியத்துடன் கூடிய ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பிலான பண்ணை எந்திரங்களை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் வழங்கினார்கள். இதில் அந்தியூர் இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தம்பிசுப்பிரமணியம், நகராட்சி முன்னாள் தலைவர் கந்தவேல்முருகன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story