விருத்தாசலத்தில், வரி உயர்வை குறைக்கக்கோரி தி.மு.க.வினர் நூதன போராட்டம் - நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு


விருத்தாசலத்தில், வரி உயர்வை குறைக்கக்கோரி தி.மு.க.வினர் நூதன போராட்டம் - நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 7 March 2019 11:00 PM GMT (Updated: 7 March 2019 10:11 PM GMT)

விருத்தாசலத்தில் வரி உயர்வை குறைக்கக்கோரி தி.மு.க.வினர் நூதன போராட்டம் நடத்தியதால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம்,

விருத்தாசலம் நகராட்சியில் 33 வார்டுகள் அமைந்துள்ளன. இங்குள்ள வியாபார நிறுவனங்கள், குடியிருப்புகள், விரிவுபடுத்தப்பட்ட மனைப்பகுதிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான வரியை நகராட்சி நிர்வாகம் பல மடங்கு உயர்த்தி உள்ளது. மேலும் இது தொடர்பாக நகராட்சி மூலம் வரி உயர்வு குறித்து துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வரி உயர்வால் நகர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உயர்த்தப்பட்ட வரியை குறைக்கக்கோரி நகர மக்கள், வியாபாரிகள், பொது நல அமைப்புகள், அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தி.மு.க. நகர செயலாளர் தண்டபாணி தலைமையில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் ராமு, சிங்காரவேல், ரவிச்சந்திரன், அன்பழகன், பாண்டியன், நம்பிராஜன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வக்கீல் அருள்குமார், வள்ளலார் குடில் இளையராஜா, வர்த்தகர் அணி கதிரவன், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேஷ் மற்றும் பலர் நகராட்சி ஆணையாளர் பாலுவை சந்தித்து மனு கொடுப்பதற்காக விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.

ஆனால் தி.மு.க.வினரிடம் மனுவை பெற்றுக் கொள்ளாமல் நகராட்சி ஆணையாளர் பாலு, அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க. வினர் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வேப்ப மரத்திற்கு வேட்டி, சட்டை அணிவித்து மரத்திடம் கோரிக்கை மனுவை கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தி.மு.க.வினர் நகராட்சி அலுவலகத்தில் இருந்தவர்களிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

குடியிருப்பு பகுதிகளில் 150 மடங்கும், வியாபார நிறுவனங்களுக்கு 200 மடங்கும், தொழிற்சாலை மற்றும் திருமண மண்டபங்களுக்கு 300 மடங்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனை உடனடியாக வசூலிக்க நகராட்சியினர் கெடுபிடி செய்து வருகின்றனர். இதனால் வியாபாரிகள், நகர மக்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த பிரச்சினை சம்பந்தமாக கடந்த 6 மாதத்திற்கு முன்பே மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் முழுவதும் அறிவிக்கப்படாத வரி உயர்வை கண்டித்தும், வரி உயர்த்திய தமிழக அரசை கண்டித்தும் தி.மு.க. சார்பில் போராட்டங்கள் நடந்தது. விருத்தாசலம் நகராட்சி அலுவலகம் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இருப்பினும் விருத்தாசலத்தில் வரி குறைப்பு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. வரி மேல் முறையீட்டுக் குழுவும் செயல்படாமல் உள்ளதால் மக்கள் பல்வேறு மனவேதனைக்கு ஆளாகி வருகின்றனர். நகர மக்களின் நலன் கருதி உயர்த்தப்பட்ட வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story