ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
ஆம்பூர் அருகே ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை கற்பழித்த வாலிபருக்கு வேலூர் மகளிர் கோர்ட்டில் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
வேலூர்,
வேலூர் மாவட்டம் ஆம்பூரையடுத்த பெரியாங்குப்பம் அருகே உள்ள முருங்கதோப்பு பகுதியை சேர்ந்தவர் வேலன். இவருடைய மகன் சாமுவேல் என்ற சாமிநாதன் (வயது 32). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி விட்டது.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 16 வயது இளம்பெண் ஒருவரை சாமுவேல் காதலிப்பதாக கூறி உள்ளார். மேலும் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த 14.3.2017 அன்று பெங்களூருவுக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து ஆசைவார்த்தை கூறி, இளம்பெண்ணை கற்பழித்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் இளம்பெண்ணின் தந்தை ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சாமுவேலை கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கு விசாரணை வேலூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி செல்வம் வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அப்போது இளம்பெண்ணை கற்பழித்த வழக்கில் 10 ஆண்டுகளும், பாதிக்கப்பட்டவர் மைனர் பெண் என்பதால் ‘போக்சோ’ சட்டத்தில் 7 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்தார். ரூ.6 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் சிறைத்தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.