வகுப்பறைகள் கட்டும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
மணல்மேடு அருகே வகுப்பறைகள் கட்டும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மணல்மேடு,
நாகை மாவட்டம், மணல்மேடு அருகே காளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 8-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவ-மாணவிகளின் வசதிக்காக புதிய வகுப்பறைகள் கட்டும் பணி கடந்த சில ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகிறது. இதனால் போதிய வகுப்பறை வசதியின்றி மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். மேலும், பள்ளியில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றியும் அவதிப்படுகின்றனர்.
இந்தநிலையில் வகுப்பறைகள் கட்டும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு திறந்துவிட வலியுறுத்தியும், பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் நேற்று காலை பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மணல்மேடு போலீசார் மேற்கண்ட இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் காளி வழியாக மயிலாடுதுறை-குத்தாலம் செல்லும் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story