கடனுக்கு வாங்கிய டிராக்டரை அதிகாரிகள் எடுத்து சென்றதால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை


கடனுக்கு வாங்கிய டிராக்டரை அதிகாரிகள் எடுத்து சென்றதால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 9 March 2019 4:45 AM IST (Updated: 8 March 2019 11:04 PM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே கடன் பெற்று வாங்கிய டிராக்டரை தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் எடுத்துச் சென்றதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

அரசூர்,

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.மழவராயனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் மகன் பாலாஜி (வயது 30), விவசாயி. இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முன்பணம் கட்டி ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதியதாக டிராக்டர் ஒன்றை வாங்கினார்.

இதற்காக அவர் கடந்த 8 மாத காலமாக டிராக்டருக்குரிய தவணை தொகையை வட்டியுடன் கட்டி வந்தார். இந்தமாதம் அதாவது கடந்த 5-ந் தேதி கடைசி தவணை தொகை கட்ட வேண்டும். இதற்கான ஏற்பாட்டில் அவர் ஈடுபட்டிருந்தார். ஆனால் குறித்த நாளில் அவரால் தவணை தொகையை கட்ட முடியவில்லை.

இதனால் அந்த நிதி நிறுவன அதிகாரிகள் மழவராயனூருக்கு வந்து பாலாஜியின் டிராக்டரை எடுத்துச்செல்ல வந்தனர். உடனே பாலாஜி மற்றும் அவரது குடும்பத்தினர், தவணை தொகை எப்படியாவது கட்டி விடுகிறோம், இன்னும் சில நாட்கள் மட்டும் அவகாசம் தாருங்கள் என்று மன்றாடி கேட்டுக் கொண்டனர். இருப்பினும் அதிகாரிகள் டிராக்டரை எடுத்துச்சென்று விட்டனர்.

ஊர் பொதுமக்கள் முன்னிலையில் அதிகாரிகளிடம் எவ்வளவோ கெஞ்சியும் அதை பொருட்படுத்தாமல் தன்னுடைய டிராக்டரை எடுத்துச்சென்று விட்டதால் பாலாஜி மிகவும் மனவேதனை அடைந்தார்.

இதனால் அவமானம் தாங்க முடியாமல் அவர், பயிருக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். சிறிது நேரத்தில் வாயில் நுரைதள்ளியபடி பாலாஜி மயங்கி கிடந்ததை பார்த்ததும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே பாலாஜியை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

தற்கொலை செய்து கொண்ட பாலாஜிக்கு திருமணமாகி தரணி என்ற மனைவியும், ருசிதா (5) என்ற மகளும், கவியரசு (2) என்ற மகனும் உள்ளனர். இந்த சம்பவத்தினால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

Next Story