நெல்லை அருகே மோட்டார் சைக்கிள்-பஸ் மோதல்: கூட்டுறவு வங்கி ஊழியர், 2-ம் வகுப்பு மாணவன் பலி பெண் படுகாயம்
நெல்லை அருகே பஸ்சின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில், கூட்டுறவு வங்கி ஊழியர், 2-ம் வகுப்பு மாணவன் பலியானார்கள். மேலும் ஒரு பெண் படுகாயம் அடைந்தார்.
நெல்லை,
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் நாடார் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். அவருடைய மகன் கணேஷ்குமார் (வயது 30). இவர் வீரபாண்டியபட்டினம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவருடைய அக்காள் ரத்தினமாலா (35). இவர் தனது கணவர் சந்திரசேகருடன் நாமக்கலில் வசித்து வருகிறார். இவர்களுடைய மகன் சச்சின் (7). இவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். ரத்தினமாலா தனது மகனுடன் பெற்றோரை பார்க்க நாமக்கலில் இருந்த பஸ்சில் நெல்லை புதிய பஸ் நிலை யத்திற்கு நேற்று காலை வந்தார்.
இவர்களை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக கணேஷ்குமார் தனது மோட்டார் சைக்கிளில் பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அவர்கள் பஸ்சில் இருந்து இறங்கியதும் கணேஷ்குமார், மோட்டார் சைக்கிளில் 2 பேரையும் ஏற்றிக்கொண்டு ஏரலுக்கு புறப்பட்டார்.
மோட்டார் சைக்கிள் பாளையங்கோட்டையை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் நெல்லையில் இருந்து ஆத்தூருக்கு ஒரு அரசு பஸ் சென்றது. அந்த பஸ்சை கணேஷ்குமார் முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே ஒரு அரசு பஸ் வந்தது.
இதனால் பதற்றம் அடைந்த அவர் மோட்டார் சைக்கிளின் பிரேக்கை அழுத்தினார். இதில் எதிர்பாராதவிதமாக ஆத்தூருக்கு சென்ற அரசு பஸ்சின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியது.
இந்த விபத்தில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். கணேஷ்குமார் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
மேலும் படுகாயமடைந்த ரத்தினமாலாவையும், சச்சினையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக, அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ்சில், பாளையங் கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி சச்சின் பரிதாபமாக உயிரிழந்தான். ரத்தினமாலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து சிவந்திப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் டிரைவர் நாங்குநேரி அருகே உள்ள ஏமன்குளத்தை சேர்ந்த ராபின்சனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story