நாமக்கல்லில் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது


நாமக்கல்லில் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 9 March 2019 4:30 AM IST (Updated: 9 March 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது.

நாமக்கல், 

வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி 18 வயது நிரம்பிய தகுதியுடைய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற செய்வது குறித்தும், அனைத்து வாக்காளர்களையும் வாக்களிக்க செய்வதற்கான பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்வது குறித்தும் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்வது குறித்து காட்சிவழி தகவல் தொடர்பு சாதனத்தின் மூலம் விளக்கப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியம் பேசியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் 18 வயது நிரம்பிய தகுதியுடைய அனைத்து வாக்காளர்களையும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்ப்பு பணிகளுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

கல்லூரிகளில் பயிலும் 18 வயது நிரம்பிய மாணவ, மாணவிகளை வாக்காளர் பட்டியலில் இடம்பெற செய்வதற்காக கல்லூரி நிர்வாகத்தினருடன் இணைந்து சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் தேர்தல் தூதுவர்கள் நியமிக்கப்பட்டு, கல்லூரிகளிலேயே சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இணையதளம் மூலமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி தகுதியுடைய அனைத்து வாக்காளர்களையும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற செய்வதற்காக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்கள் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு பேரணிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு முகாம்கள் நடத்தி பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பட்டியலில் வாக்காளரின் பெயரை சேர்க்க வேண்டும்.

மேலும், வெளியூர்களில் இருந்து வந்து நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து கொண்டிருக்கும் நபர்கள், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்களா? என ஆய்வு செய்து அவர்களையும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற செய்ய வேண்டும்.

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் என அனைவரையும் தவறாமல் வாக்களிக்க செய்வதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எனவே தேர்தல் பணிகளில் ஈடுபட்டு உள்ள அனைத்து அலுவலர்களும் இணைந்து பணியாற்றி, தகுதியுடைய அனைத்து வாக்காளர்களையும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற செய்வதோடு, அவர்களை வாக்களிக்க செய்வதில் நாமக்கல் மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக விளங்க செய்ய வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், நாமக்கல் சப்- கலெக்டர் கிராந்தி குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ், மகளிர் திட்ட இயக்குனர் டாக்டர் மணி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story