கோவை அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன


கோவை அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன
x
தினத்தந்தி 9 March 2019 4:15 AM IST (Updated: 9 March 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

கோவை அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன.

கோவை,

கோவை காந்திபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாபு. தொழிலாளி. இவருடைய மனைவி சிந்து. இவர்களுக்கு கடந்த 1¾ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கர்ப்பமான சிந்து 3-வது மாதம் ஸ்கேன் பரிசோதனை செய்வதற்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவருக்கு டாக்டர்கள் ஸ்கேன் பரிசோதனை செய்தனர்.

இதில் அவருக்கு 3 கருக்கள் இருப்பதை அறிந்தனர். இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு சத்து மாத்திரைகள் வழங்கி உணவு சாப்பிடும் முறை குறித்து ஆலோசனை கூறினர். இதைத்தொடர்ந்து நிறைமாத கர்ப்பிணியான சிந்து கடந்த 2-ந் தேதி பிரசவத்துக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டார்.

பிரசவ வலியால் துடித்த சிந்துவுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை எடுக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக 4 பேர் கொண்ட டாக்டர் குழு அமைக்கப்பட்டது. அவர்கள், நேற்று சிந்துவுக்கு சிசேரியன் முறையில் அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்த்தனர். இதனால் காலை 9.23 மணியளவில் சிந்துவுக்கு அழகான 3 பெண் குழந்தைகள் பிறந்தன.

அதில், 2 பெண் குழந்தைகள் தலா 1¾ கிலோ எடையும், ஒரு குழந்தை 1½ கிலோ எடையுடன் உள்ளன. தாய் மற்றும் குழந்தைகள் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மகளிர் தினத்தன்று பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் நல்ல முறையில் பிறந்ததால் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் டீன் அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடினர்.

இது குறித்து டீன் அசோகன் கூறும்போது, கோவை அரசு ஆஸ்பத்திரியில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்து உள்ளன. அந்த பெண்ணுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்த டாக்டர்களை பாராட்டுகிறேன் என்றார்.

இது குறித்து அந்த குழந்தைகளின் தந்தை சுரேஷ்பாபு கூறும்போது, மகளிர் தினத்தன்று ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் மிகவும் ஏழையான நான் 3 பெண் குழந்தைகளையும் எப்படி வளர்க்கப்போகிறேன் என்று தெரியவில்லை. எனவே அரசு எனக்கு உதவ வேண்டும் என்றார்.

Next Story