எட்டயபுரம் அருகே பஸ் பள்ளத்தில் பாய்ந்து 12 பேர் காயம்
எட்டயபுரம் அருகே பஸ் பள்ளத்தில் பாய்ந்து 12 பேர் காயம் அடைந்தனர்.
எட்டயபுரம்,
கோவையில் இருந்து திருச்செந்தூருக்கு நேற்று முன்தினம் இரவில் அரசு பஸ் புறப்பட்டு சென்றது. நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த சுதாகர் (வயது 38) பஸ்சை ஓட்டிச் சென்றார். கூடலூரைச் சேர்ந்த ராஜேந்திரன் (39) பஸ்சில் கண்டக்டராக இருந்தார். பஸ்சில் 48 பயணிகள் பயணம் செய்தனர்.
நேற்று காலை 6.30 மணி அளவில் எட்டயபுரம் அருகே முத்துலாபுரம் நாற்கர சாலை மேம்பாலத்தை கடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் சுமார் 15 அடி ஆழ பள்ளத்தில் பாய்ந்து நின்றது. அங்குள்ள டீக்கடையின் அருகில் குவித்து வைக்கப்பட்டு இருந்த மரக்கட்டைகளின் மீது பஸ் மோதியவாறு நின்றது.
இந்த விபத்தில் பஸ்சின் டிரைவர் சுதாகர், கண்டக்டர் ராஜேந்திரன், பஸ்சில் பயணம் செய்த இந்திராணி (46), கண்ணன் (36), கார்த்திக் (32), சந்தியா (22), ராஜசேகர் (30), இளங்குமரன் (11), பண்ணாரி (55), பேச்சியம்மாள் (50), பகவதி (37), மாரிச்சாமி (45) ஆகிய 12 பேர் காயம் அடைந்தனர். உடனே அவர்களை எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
பலத்த காயம் அடைந்த சுதாகர், ராஜேந்திரன், இந்திராணி, கண்ணன், கார்த்திக் ஆகிய 5 பேரை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story